கூழாங்கற்கள் - எழுத்தாளர் உதய சங்கர் அவர்களின் விமர்சனம்

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் 2015-16 ஆம் ஆண்டுக்கான சிறுவர் இலக்கியத்துக்கான் விருது பெற்ற என் ஆசான்களில் ஒருவரான எழுத்தாளர் உதய சங்கர் அவர்களுக்கு நன்றி




தமிழுக்கு நல்வாய்ப்பு!
மத்திய தரவர்க்கத்து மன அவசங்களையே நுணுக்கி நுணுக்கி எழுதிக்கொண்டிருந்த கடந்த காலகட்டத்திலிருந்து புதிய அலைகளுடன் இதுவரை கண்டிராத புதிய பிரதேசங்களுடன், புதிய மனிதர்களுடன், மாறிவரும் புதிய மனநிலைகளுடன் புதிய எழுத்தாளர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

கனவுப்பிரியனின் கூழாங்கற்கள் கதைத்தொகுப்பும் அப்படி ஒரு புத்தம் புதிய கதைக்களத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அதுவும் சர்வதேச கதைக்களம். அதிகம் பேசப்படாத அரபிக்களம். பாகிஸ்தானிகள் வருகிறார்கள். பிலிப்பைனி பெண் வருகிறாள். பெல்ஜியம் நாட்டுப்பெண் வருகிறாள். அரபிப்பெண்கள் வருகிறார்கள். பாலஸ்தீனி நாட்டுக்காரர் வருகிறார். இப்படியொரு சர்வதேச கதைக்களன் தமிழுக்குப் புத்தம் புதிது. முதலில் இதற்காகவே கனவுப்பிரியனை வாழ்த்துவோம்.
கூழாங்கற்கள் கதைகளின் மூலம் தமிழுக்கு ஒரு புதிய கதைசொல்லி கிடைத்திருக்கிறார். கனவுப்பிரியனின் கதைக்களத்தை இரண்டு விதமாகப்பிரிக்கலாம். சொந்த நாட்டிலுள்ள கடந்தகால வாழ்வு, அதில் ஊடாடிய மனிதர்கள், உறவுகள், மற்றொன்று அந்நிய நாடுகளில் வேலை நிமித்தமாக சந்தித்த மனிதர்கள், உறவுகள், அநுபவங்கள் என்று சொல்லலாம். அனைத்துக்கதைகளும் வாசிக்க சுவாரசியமாக இருக்கின்றன.
நகைச்சுவையுணர்வு இயல்பாகவே கைவந்திருக்கிறது. சரளமான மொழிநடை சுகமாக இருக்கிறது. வாசிக்குபோது பல இடங்களில் புன்னகையும், வருத்தமும் தோன்றுவது படைப்பாளிக்குக் கிடைத்த வெற்றி. இந்தத் தொகுப்பில் இந்த மடம் இல்லைன்னா சந்த மடம், களிமண் வீடு, குண்டு பாகிஸ்தானி, வடிவு, உப்புக்காற்று, பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா?, நாடு துறந்தவன் கதை, மனிதரில் இத்தனை நிறங்களா? அவரு அனில்கும்ளே மாதிரி, ரபீக்@ஜிமெயில்.காம், ஜைனப் அல் பாக்கர், ஜூவானா என்றொரு பிலிப்பைனி பெண், அக்கா நீங்க அழகா இருக்கீங்க? போன்ற கதைகளை முக்கியமான கதைகள் என்று சொல்லலாம்.
வீட்டை, தெருவை, ஊரை, ஊர்களை, மட்டுமே கதைக்களமாகக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிற சமகால எழுத்தாளர்கள் மத்தியில் கனவுப்பிரியன் உலகத்தைக் கதைக்களனாகக் கொண்டு தன்னுடைய கூழாங்கற்களை வெளியிட்டிருக்கிறார். மிகுந்த நம்பிக்கைக்குரிய எழுத்தாளராக கனவுப்பிரியன் திகழ்கிறார்! அடுத்தடுத்த படைப்புகளில் இன்னும் சிறந்த படைப்புகளைப் படைக்க தமிழுக்கு வளம் சேர்க்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! கனவுப்பிரியன்!

Comments

Popular posts from this blog

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

கூழாங்கற்கள் - நினைவுகள்

சுமையா சிறுகதைத்தொகுப்பு பற்றிய Sakthi RS அவர்களின் வாசிப்பனுபவம்