சுமையா - சிறுகதைத்தொகுப்பு பற்றி சுப்ரா வே சுப்பிரமணியன்

சுமையா “ – கனவுப் பிரியன் [ சிறுகதைத் தொகுப்பு ] ஒரு வாசிப்பு அனுபவம்
 .


ரொம்பச் சின்ன வயதில் திரும்ப பம்ருதி திரும்ப வாசித்தவைகளில் பிரதானமானது சிந்துபாத் கதைகள்தான் . அதிலும் குறிப்பாக அவற்றில் வரும் பறக்கும் மாயக் கம்பளம் மனதில் திரும்பித் திரும்பி வந்து கொண்டே இருக்கும் . அப்படி ஒரு மாயக் கம்பளம் கிடைத்தால் சிந்துபாத் போல நினைத்த இடங்களுக்கெல்லாம் போய் வரலாமே என்ற சிறு பிள்ளைத் தனமான ஆசை . பறக்கும் கம்பளம் எல்லாம் கிடையாது , பறக்க வேண்டுமானால் விமானத்தில் ஏறினால்தான் முடியும் என்று தெளிவாக அறிந்து கொண்ட பின்னரும் அவ்வப்போது அந்தக் கம்பளம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இப்போது வரை மனதில் இருக்கத்தான் செய்கிறது . அப்படி இருந்தால் இப்போது யாரிடம் இருக்கும் என்று அவ்வப்போது மனதிற்குள் கேட்டுக் கொள்வதுண்டு . கனவுப் பிரியனின் முதல் தொகுப்பை வாசித்த போது , அவரிடம்தான் அது இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது . இப்போது அவரது இரண்டாவது தொகுப்பான சுமையாவை வாசித்து முடித்த பிறகு சந்தேகம் உறுதியாகி விட்டது . ஆம் …. அவரிடம்தான் உள்ளது . இல்லையென்றால் சிறுகதை என்ற வடிவத்தை கையில் எடுத்துக் கொண்டு அவர் நம்மை இத்தனை இடங்களுக்கு கூட்டிச் செல்வது எப்படி சாத்தியமாகும் .
தொகுப்பின் முதல் கதையான சுமையா வில் ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு , சியால் கோட் , நம்பி கோயில் , இராமேஸ்வரம் , ரியாத் , கோவா , ஜம்மு , லடாக் , பெயர் தெரியாத ஸ்பானீஷ் தீவு , ஆந்திராவின் ராஜ முந்திரி , ஈரானில் டெஹ்ரான் , கட்டாக் , இடை இடையே சென்னை , தூத்துக்குடி என்று நம்மை கூட்டிச் சென்று கடைசியில் அஸ்ஸாமின் கெளஹாத்தியில் கொண்டு வந்து இறக்கி விடுகிறார் 21 கதைகளைச் சொல்லும் சாக்கில் .
முதல் கதையான சுமையா வில் ஊடகப் பணியில் ஏற்பட்ட ஆர்வத்தால் வயதாகியும் திருமணம் பண்ணிக் கொள்ளாமல் இருக்கிறார் பிரதான பாத்திரம் சுமையா . சியால் கோட்டில் கலவரத்தில் பெற்றோரை இழந்து தன் தோழியின் குடும்பத்தோடு இந்தியா வந்து சென்னையில் சுமையாவின் குடும்பத்தில் ஒருவராகவே இருக்கும் , 56 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ள , சித்தி என்று சுமையா அன்போடு அழைக்கும் ஆயிஷா ஒரு பொய்யைச் சொல்லி சுமையாவை சென்னைக்கு வரவழைத்து , அங்கிருந்து சியால் கோட்டிற்கு அழைத்துச் சென்று , இலேசாக மழை பெய்யும் ஒரு சூழலில் கால்பந்து விளையாடும் சாக்கில் கால்பந்து விளையாட்டையும் , காதலையும் இணைக்கும் கவிதை வரிகள் மூலம் சுமையாவின் மனதில் காதல் உணர்வுகளை உருவாக்கி , அவளிடம் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும் வகையில் மன மாற்றத்தை உருவாக்கி இருவரும் சென்னைக்குத் திரும்புவதாக முடிகிறது கதை . சுமையா பாத்திரம் மூலம் வாசிப்பவர் மனதில் சுமையை ஏற்றி வைத்து விடுவாரோ என்ற பயத்தை இனிமையான முடிவின் மூலம் போக்கியிருக்கும் கதை கனவுப் பிரியன் இடை இடையே சொல்லிச் செல்லும் பல தகவல்கள் மூலம் மேலும் சுவையானதாகி விடுகிறது .
சென்னையில் இருந்து சட்டென்று மாயக் கம்பளத்தில் ஏற்றி நம்மை நம்பி கோவிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறார் அடுத்த கதையில் . நம்பி கோவிலில் ஏற்படும் அமானுஷ்ய நிகழ்வுகள் கற்பனைதான் என்றாலும் , உண்மையாக இருக்கலாமோ என்ற ஐயத்தை உருவாக்கி விடுகிறது அவர் கதை சொல்லும் பாணி . 
அது வேறு ஒரு மழைக்காலம் கதையில் கூட்டுக் குடும்பத்தின் சிதைவால் இளைய தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளை ஒரு புதிய கோணத்தில் காட்டுகிறார் . 
எட்டாவது அதிசயம் “ , “ ஷாஹிர்க்கா தட்டுக் கடை “ – இரு கதைகளும் இன்னும் உயிர்ப்போடு இருக்கும் மானுடம் குறித்து சொல்லப் பட்ட கதைகள் . அதிலும் தட்டுக் கடை கதை அளவில் சிறிதென்றாலும் அது கூறிப் போகும் செய்தி மிகப் பெரியது . பல தடவை கையாளப்பட்ட கரு என்றாலும் கனவுப் பிரியனின் கதை சொல்லும் பாணியால் புதிதாகவே தோன்றுகிறது . 
வியாதிகளின் மிச்சம் தீமைகளை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத சாமானியர்கள் பற்றிய கதை . துணிக்கடைக்கார அண்ணாச்சி கதை மனிதர்களின் அன்பு நிரம்பிய பக்கங்களைக் காட்டும் இன்னொரு கதை . 
அன்று சிந்திய ரத்தம் “ , ” ரச வாதம் ” – இவ்விரு கதைகளும் வாசித்து முடிக்கையில் மனதில் பல்வேறு உணர்ச்சிகளை கிளப்பி விடுகின்றன . 
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் …. “ என்ற பாடல் வரிகளை நினைவு படுத்துகிறது அன்னக்காடி “ . ” ஜெனியின் டைரிக் குறிப்புகள் கதை வாசிக்கையில் ஸ்டீபன் கிங் கதைகள் நினைவுக்கு வருவதை தடுக்க இயலவில்லை . புதிய சோதனை முயற்சி . 
ஆவுளியா “ , “ மண்ணெண்ணெய் குடிச்சான் “ , கடல் குதிரை “ , சூது கவ்வும் “ , “ தற்கொலைப் பறவைகள் “ ….. இவை அனைத்துமே பணம் சம்பாதிக்கும் ஆசையில் சில மனிதர்கள் சமூகத்திற்கு விளைவிக்கும் கேடுகள் குறித்த கதைகள் . தங்கள் செயல்களில் குறுக்கிடுபவர்களை கொலை செய்யும் அளவிற்கு துணியும் கறுப்பு ஆடுகள் குறித்தவை . எனினும் இதில் ஆவுளியா தவிர மற்ற அனைத்து கதைகளிலும் , தர்மம் எவ்வளவு முயன்றாலும் இறுதி வெற்றி சூதுக்குதான் என்ற யதார்த்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் . 
தொகுப்பின் பல கதைகளின் கரு சாதாரணமானவையாகவே இருந்தாலும் , கனவுப் பிரியன் கதைகள் நிகழ்வதற்காக தேர்ந்தெடுத்துள்ள தளங்களும் , போகிற போக்கில் அவர் கதைகளுக்குள் நுழைத்திருக்கும் ஏராளமான தகவல்களும் , உத்திக்கென மெனக்கடாத அவரது இயல்பான கதை சொல்லும் பாணியும் வாசிப்பதற்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக அமைந்துள்ளது தொகுப்பு .
சுமையா “ [சிறுகதைத் தொகுப்பு ] 
ஆசிரியர் கனவுப் பிரியன் .
வெளியீடு நூல் வனம் , சென்னை .
விலை ரூ . 160 /
நூல் பெற – 91765 49991 .


Comments

Popular posts from this blog

சுமையா சிறுகதைத்தொகுப்பு பற்றிய Sakthi RS அவர்களின் வாசிப்பனுபவம்

கூழாங்கற்கள் புத்தக வெளியீடு பற்றி ஜன்னல் இதழில்