“ கோமதி எஞ்சினியரிங் வொர்க்ஸ் “
டெல்லியின் நேஷனல் ஒலிம்பிக் கமிட்டி
அலுவலக ரோட்டின் திருப்பத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காரில் ஏறி “ துவாரகா
போ “ என்றேன்.
அங்கிருந்துபின் மானேசர் வேறு செல்ல
வேண்டும். ஒரே நாளில் வேலையை முடிக்க வேண்டும் என்பதால் வாடகை டாக்ஸி எடுக்க
வேண்டியதாயிற்று இல்லையெனில் டிராபிக் தொந்தரவு இல்லாத மெட்ரோ தான்எப்பொழுதும்
வசதி.
வெளிநாட்டில் இருந்து வேலை விஷயமாக இந்தியா
வந்திருக்கும் எனக்கு கொடுப்பட்டிருக்கும் மூன்று நாட்களுக்குள் மூன்று வேலையும்
முடித்தாக வேண்டும் என்ற அவசரம்.
பகல் பதினோரு மணி என்பதால் ரோட்டில்
அத்தனை ட்ராபிக் இல்லை. காருக்குள் FM ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. வசந்த் நகர்
தாண்டும் போது ரேடியோவில் அந்த பாடல் ஒலித்தது. பங்கஜ் உதாஸ் பாடிய “ சிட்டி ஆயிஹே
ஆயிஹே சிட்டி ஆயிஹே“ என்று.
சொந்த ஊரை விட்டு விலகி நிற்கும்
அனைவருக்குமே அன்றைய மொபைல் இல்லாத காலகட்டத்தில் இந்த பாடல் ஒரு நினைவை கிளறும்
ஊர்க் குருவி.
கேட்க கேட்க நானும் அந்த பாடலோடு
கரைந்து பின்னோக்கி செல்லத் துவங்கினேன்.
இந்த பாடலை முதன் முதலாக நியூ பாம்பே,
வாசியில் விடுமுறையில் அண்ணன் வீடு வந்த போது கேட்டது. பாடலை கேட்டதும் புதிதாக
கல்யாணம் ஆகி ஊர் மாறி வந்திருக்கும் அண்ணி அழுதது எல்லாம் நினைவில் வந்து போனது கூடவே பழைய பண்ணை
வீடும் அண்ணனும்.
அவர்ஐந்தாவது அண்ணன் எனக்கு. செகண்ட்
ஷோ சினிமா பார்த்து வந்தாலும் மறுநாள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும்
புத்திசாலி. கட்டுமஸ்தான உடல். நன்கு படம் வரைவார்.
சில அண்ணன்களிடம் பயம்
இருக்கும் சிலரிடம் மரியாதை தோன்றும் சிலரிடம் நம்மை அப்படியே ஒப்படைக்கலாம். அப்படியான
அண்ணன் அவர். கைப்பிடித்து ஆறுமுகா டூரிங் டாகிஸ்ஸில் படம் பார்க்க அழைத்து
செல்வார். தியேட்டரில்மண் குமித்து உயரமாக்கி அதில் உட்கார வைத்து “ இப்போ சினிமா பார்“ என அழகு பார்ப்பார்
சில நேரம் என்னை அழைத்து மடியில்
பிடித்து நிறுத்தி கை விரலை ஸ்குரு போல பாவித்து தலையின் நாலா பக்கத்திலும் ஸ்குரு
கழற்றுவது போல செய்து மண்டை ஓட்டை கழற்றி தலை முடியை கோதி அங்கும் இங்கும் முடியை
கலைத்து ரிப்பேர் பார்த்தாச்சு என்று கூறி மீண்டும் மண்டை ஓட்டை வைத்து ஸ்குரு
மூலம் டைட் செய்வது போல செய்வார். சில சமயம் நானாகவேசென்று மண்டையை ரிப்பேர் பார்
என தலையை நீட்டுவேன்.
வீட்டின் முதல் எஞ்சினியர். டிப்ளோமா
படித்ததே அன்றைய சமயம் எஞ்சினியர் எனக் கூற போதுமானதாக இருந்தது.
படித்து முடித்ததும் ஸ்பிக் செல்லும்
வழியில் இருக்கும் கோமதி எஞ்சினியரிங் வொர்க்ஸில்800 ரூபாய் சம்பளத்தில் அவருக்கு வேலை
கிடைத்தது. வீட்டிற்கு இன்னுமொரு புதிய வருவாய் வந்துவிட்ட சந்தோஷம். அவர் ஓடத்
துவங்கி இருந்தார்.
விதி சிலரை ஒரே இடத்தில்
நிறுத்துவதில்லை, சில வருடங்களில் ஊரில் இருந்து மங்களூர் சென்றார் பின்
அங்கிருந்து L&T என்ற டிராகுலா கடிக்க பாம்பே பயணம்.
பின் நீண்ட வருடங்கள் பாம்பே வாசம். பதினைந்து
பைசா போஸ்ட் கார்டில் அப்பா எழுதும் “ அன்பும் பாசமும் மிக்க மகனுக்கு, நீ
அனுப்பிய 6௦௦ ரூபாய் கிடைத்தது “ என்ற வார்த்தைகள் வருடங்களாய் தொடர்ந்தன.
வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு
முறை ஊர் வருவதுண்டு.
அவர் வாங்கி வந்தது தான் வீட்டின் இரண்டு ஸ்பீக்கர்களுடன்
கூடிய முதல் ஸ்டீரியோ டேப் ரிக்கார்டர். கூடவே சில கேசெட்கள். தேயத்தேய ஓட்டினோம்
அதைநேர காலமின்றி.
என்னையும் படிக்க வைக்கச் சொல்லி பிளஸ்
டூ முடித்ததும் அழுது அரற்றினேன். அடுத்த போஸ்ட் கார்டில் “ தம்பி படிக்க
விரும்புகிறான் கூடுதலாக 2௦௦ ரூபாய் அனுப்ப முடியுமா “ என்ற கோரிக்கை பறந்தது.
அதை நிறைவேற்றவும் செய்தார் அவர். அடுத்த
மாதம் முதல் “ நீ அனுப்பிய 800 ரூபாய் கிடைத்தது “ என அப்பாவின்கடிதம் பேசியது.
அதே வருடத்தில் அவருக்கு பெண்
பார்க்கத் துவங்கினார்கள். சில உறவு முதலைகள் எப்படியாவது அவரைகடித்து விட எண்ணி
துடியாய் துடித்தார்கள். அம்மா அவர்களின் கடிக்கு அகப்படாததால், பணத்தை விட
நிம்மதி தரும் ஒரு துணையை தேடித் தந்து விட அம்மா துணிந்ததால் உறவுக்குள்ஏகப்பட்ட கசமுசா.
இதோ அதோ என்று ஊருக்குள்ளே பெண்
பார்க்கப்பட்டது. சிலர் வேண்டாம் என்று சொல் என கடிதம் எழுதுவதாக அறிந்ததும் நானும்
கடிதம் எழுதினேன் “ சொற்ப சம்பளத்தில் பள்ளி ஆசிரியர் வேலை செய்கிறார்
அதனால்பிறக்கும் குழந்தைகளை நன்கு பார்த்துக் கொள்வார், உன்னைப் போலவே ஓவியம்
வரைவதில் ஆர்வம் இருப்பதால் சம ரசனை உடையவர் ஆகிறார் ஹிந்தி தெரியும் இன்னபிற
சாத்தியகூறுகளை எழுதிஅதனால் அம்மா கூறும் அதே பெண்ணை கட்டிக் கொள்ளவும் “ என்று.
ஒரு முகூர்த்த நாளில் இனிதே நடைபெற்றது
திருமணம்.
கல்யாணத்திற்குகையில் வைத்த மருதாணி அழிவதற்குள் மணமகளும் மாமியார்
வீட்டில் தந்த மசாலா பொடியுமாக பாம்பே நோக்கி பயணமானார்.
உங்களின் வேலை ஊருக்கு வெளியே என
ஆகிவிட்டால் உங்களின் வாழ்வின் சந்தோஷப் பகுதிகளை முக்கால் பாகம் நீங்களே தீயிட்டு
கொளுத்தி விட்டதாக தாராளமாக பறைசாற்றலாம்.
என்னைபோல சதா யோசிக்கும் பழக்கத்திற்கு
வாக்கப்பட்டவன் கண்ணில் மௌனராகம் சினிமாவெல்லாம் அந்நேரம் கண்ணில் பட்டிருக்க
கூடாதுதான். நானாக நிறைய யோசிப்பேன் நன்றாக இருக்கிறார்கள் தானே என்று.
படித்து முடித்தாகிவிட்டது, ஊரில்
இருந்தால் வேலைக்கு ஆகாது இல்லை இல்லை வேலை கிடைக்காது என்று சென்னை செல்ல முடிவு
செய்தேன்.
“ அன்புள்ள அண்ணனுக்கு “ இன்லேன்ட் லெட்டரில் கடிதம் பறந்தது. அடுத்த
மாதம் என் கைக்கு ஐயாயிரம் வந்து சேர்ந்தது.
சென்னையில் 7௦௦ ரூபாய் சொற்ப
சம்பளத்தில் வேலை கிடைத்தது. உறவுக்காரஅண்ணன் வீட்டில் தங்கி இருந்த காலம் அது. தினமும்
பிரெட் ஆம்லேட் அவருக்கு செய்து கொடுத்துவிட்டு அவர் சாப்பிட்ட தட்டை கழுவி
வைப்பதுடன் ஆரம்பம் ஆகும் என் அன்றைய காலைப் பொழுதுகள்.
அப்பொழுதெல்லாம் அண்ணன் பாம்பேயில்
இருந்து வந்தால் சென்னையில் ரயில் நிலையத்தில் காத்திருப்பேன். மாலை 5 மணிக்கு
பாம்பேயில் இருந்து ட்ரைன் சென்ட்ரல் வந்து சேரும். அங்கிருந்து அண்ணன் அண்ணி
குழந்தை பெட்டிப் படுக்கைகள் எல்லாம் அள்ளிக் கொண்டு எக்மோர் 6 மணி வண்டிக்கு
செல்ல வேண்டும். சிக்னலில் மாட்டிக்கொண்டால் மனசு படபடவென அடிக்கும்.
வேக வேகமாக ஓடி S6 கோச்தேடி எல்லாவற்றையும்
அள்ளிப் போட்டு டாட்டா காட்டுவேன் “ என்ன அண்ண வாழ்க்க இது “ என்றவண்ணம்.
அவர் அப்படித்தான் ரன் எடுத்து ஓடிக்
கொண்டிருந்தார்.
மீண்டும் பாம்பே திரும்பும் போது சென்ட்ரல் ஸ்டேசனில் வைத்து
என்னிடம் “ தூங்க தலவாணி கூட கொடுக்கல / குழந்தைக்கு பால் கொடுக்கல“என்ற ஆதங்கம்அருகில்
ஓடும்.
கேட்டவண்ணம் அருகில் அமைதியாக நிற்பார்.
பிறரை மதிக்கும் சாதுவான ஆண்கள் என்றாலே இப்படித்தான். ஆளாளுக்கு வந்து ஆணி
அறைந்து விட்டு போவார்கள்.
குடித்து விட்டு வந்து உறவுக்காரர்களை மனைவியை ரப் ரப்
என அறையும் ஆண்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை உலகில். பாவம் நாங்கள் குடிக்க பழகி
இருக்கவில்லை.
மூன்று மாத இடைவெளியில் அம்மாவும்
அப்பாவும் இறந்து விட எமெர்ஜென்சி என்று பிளைட்டில் குடும்பத்துடன் பறந்து
வந்தாலும் பெற்ற தாய் தைந்தையிடம் என்ன பேசி விடவா முடியும் அப்பொழுது.
பிறிதொரு நாளில் சூரத்தில் பிளேக் என
சூறாவளி வீசியபோது ஓடிய களைப்பில் அங்கிருந்த குடும்பத்தை சொந்தஊரில்அண்ணியின்
அம்மா வீட்டருகில் விட்டுவிட்டுஓடிக் களைத்தவராக இரண்டு சூட்கேஸும் ஒரு ஹேண்ட்
லக்கேஜுமாகதுக்கம் கனக்கும் மனதோடு வெளிநாடு பயணமானார்.
சென்னையில்எனது சம்பளம் 7௦௦ இருந்து
12௦௦ ஆகி இருந்தது, அதற்கு மேல் கேட்கஅடுத்து ஒருவன் 7௦௦ க்கு வாசலில்
காத்திருப்பதாக நிர்வாகம்கூற கையில் பணம் இன்றி நல்ல மாடு உள்ளூரிலே விலை போகும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டு வந்து
சேர்ந்தேன்.
அண்ணன் வெளிநாட்டில் இருந்து வருகிறார்
என வருடத்திற்கு ஒரு முறை நள்ளிரவில் காரில் திருவனந்தபுரம் சென்று வந்தேன் அண்ணியாரின்
குடும்பத்துடன்.
அம்மா அப்பா இல்லாத பண்ணை வீட்டில் ஒரே
ஒருநாள் எங்களை காண வந்து போவார். நல்லா இருக்கியா என்ற கேட்ட அடுத்த நொடி முதல் அவருக்கான
அந்த வருடத்து மொத்த பஞ்சாயத்தும் அவர் தலையில் ஏற்றி வைக்கப்படும்.
ஒரு நாள் விடுமுறையில் வந்தவர் நெஞ்சு
வலிக்கிறது எனக் கூற அவரை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்த என்னிடம்“
வருசத்துல ஒரு மாசம் தான் பொண்டாட்டி கூட இருக்கேன். அது கூட பிடிக்கலையா
யாருக்கும். நெஞ்சு வலிக்கிடா “ என்றார். உண்மையில் ஆண்கள் மத்தளம்அல்ல அதற்கும்
மேல், எல்லா பக்கமும் அடி விழுகிறதே.
பின் அவர் வெளிநாட்டில் இருந்து
வருவதும் தெரியாது போவதும் தெரியாது என ஆகிப் போனோம். எனது திருமணம் எல்லாம் அவர்
இல்லாமலே நடந்து முடிந்தது.
சில விஷயங்கள் நடந்தே தீரும். அதை
தவிர்க்க இயலாது. என் வாழ்விலும் அதுநிகழ்ந்தது. எதை செய்யவே கூடாது என
நினைத்திருந்தேனோ அதை நோக்கி சென்றேன், கடன் தொல்லையால் வெளிநாடு நோக்கிய பயணம்
என்ற பெயரில்.
பாம்பேயில் ஒரு இண்டர்வியு அட்டென்
செய்து பாஸ்போர்ட் சர்டிபிகேட் எல்லாம் கொடுத்து வந்திருந்தேன். நாட்கள் ஆக ஆக அவன்
வேலைக்கும் அனுப்புவதாக இல்லை பாஸ்போர்ட் திருப்பி தருவதாகவும் இல்லை.
தகவல் அறிந்தவர் ஒரு முறை இந்தியா
வரும் போது மும்பையில் இறங்கி அவன் கேட்ட 7௦௦௦ பணம் கொடுத்து என்னுடையபாஸ்போர்டை
மீட்டு வந்தார்.
பின் கனத்த நெஞ்சுடன் இரண்டு
சூட்கேஸும் ஒரு ஹேண்ட் பேக்குமாய் நானும் பயணப்பட்டேன். இல்லை பாதி
இறந்துவிட்டேன்.
நாட்கள் வேகமாக நகர்ந்து விடுகின்றன. இப்பொழுது
நானும் அவரை பார்க்க முடிவதில்லை அவரும் என்னை பார்த்து நாள் ஆயிற்று.
உனக்கு குழந்தை பிறந்தால் தான் அறிவாய்
உன் தகப்பனின் பெருமை என்பார்கள் கூடவே இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் நீ
வெளிநாடு சென்றால் தான் வெளிநாடு சென்றவனின் வலி அறிவாய் என்று
“ என் முன்னே இப்பொழுது வைக்கப்படும்
கேள்விகள் அனைத்தும் ஒரு காலத்தில் நானே கூட அவர் முன் வைத்திருக்கிறேன், பணம் ஒரு
மோசமான வஸ்து. அது பலரையும் பேசவைக்கும்“
இளமையில் காமம் மறந்து வாழ்வதென்பது
நரகத்திற்கு சமம். எல்லாமே மறந்து வாழ வேண்டிய நிலை உண்டானால் அதற்கு என்ன பெயர்
வைக்க. அப்படி உண்டாக்கிய பணம். அது கேட்ட ஒருவருக்கு தராத பட்சத்தில்,இல்லைகாலியாகும்
பட்சத்தில் அவமரியாதை உதித்து எழுகிறது. மீண்டும் ஒருவன் தன்னை மறந்து வெளிநாடு
செல்லத் துவங்குகிறான். மிஞ்சி நிற்பது அவனல்ல அவன் தந்த பணம் மட்டுமே.
நாட்கள் ஆக ஆக காலம் காட்டித் தந்தது
அண்ணன் பலருக்கும் செய்த உதவிகளை. ஆனாலும் ஒன்றுமே நடக்காதது போல இருந்து
கொள்வார்.
ஒரு நாள் எனக்கும் நெஞ்சுவலி வந்த போது,
படிக்க, வேலைக்கு செல்ல, வெளிநாடு பாஸ்போர்ட் சிக்கிய என மூன்று முக்கிய
தருணங்களில் உதவி செய்த அவர் பணத்தை திருப்பி தந்துவிட வேண்டும் என்று எண்ணி மனைவியிடம்
கூறினேன் “ அதுக்கென்ன அவுங்க மகா கல்யாணம் வருது நகையா செஞ்சிரலாம் “ என வாக்குமூலம்
தந்தாள்.
ஆனாலும் ஏதோ மிகப் பெரிய இடைவெளி அண்ணன்
தம்பி என்ற ரத்த பந்தத்திற்குள் விழுந்து விடுகிறது எதைக் கொண்டும் நிரப்ப இயலாமல்.
மொத்தகுடும்பத்திற்காக ஓடிய ஒருவனை என்
குடும்பத்திற்காக நான்
ஓடத் துவங்கியபோது தான் உணர முடிந்தது.
ஓடி களைத்த ஒருவன் முன் “ ஆம் இவன்
எனக்கு தந்து உதவினான் “ என்ற வார்த்தையை சேர்ப்பதில்லையேஏன் என்ற ஆதங்கம் கேள்வியாய்
தொக்கி நிற்கிறது.வார்த்தைகளால் கூட சந்தோஷத்தை தந்து விடக் கூடாது என்றஎண்ணம்
இருக்கும் வரை இது தொடரத் தான் செய்யும்.
காலத்தின் முன்னே பதில் தெரியாமல்
நிற்கும் என்னை அண்ணன் நினைத்துப் பார்ப்பாரா. கண்ணில் நீர்
முட்டியது திரும்பிக் கொண்டேன்டிரைவர் என்னை பார்த்து விடக்கூடாது என்றெண்ணி.
வானம்அழுது தீர்த்த விதைவை போல வெளிறிய
படி காட்சியளிக்க,கார் துவாரகா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது.
Comments