கூழாங்கற்கள் - எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் பார்வையில்
உப்புக்காற்றும் ‘அழகான” தண்டனைகளும்
கனவுப்ரியன்: நடைப்புழுதியில் கால்கள் இருக்க விரும்பும் மனதின் கதைகள்
இன்றைய முகநூல் எழுத்தாளர்களின் ஆதர்சமாக சுஜாதா இருக்கிறார். அவரின் வேகம் எடுக்கும் எடுத்துரைப்பு மொழியும் வார்த்தைகளின் குறுக்கலும் இன்றைய இளைஞர்களின் உரைநடைக்கும் மனோபாவத்திற்கும் ஏதுவாக இருக்கிறது. சொல்வதை அடுத்த நொடியில் சொல்லிப்போ என்ற தவக்களப்பாய்ச்சல் வேகம், நடை மனபரபரப்பு இன்றைய வெகுஜன தளத்தில் இயங்கும் இளைஞர்களிடம் காணலாம் .
இந்தப்பரபரப்பையும் வேகத்தையும் கனவுப்ரியனிடன் காணலாம்.முகநூல்களில் அதிகம் எழுதியவை அப்படியே நின்று போகாமல் சிறுகதைகளாக்கிய முயற்சியில் வெற்றி கண்டிருக்கின்றன. ஆனால் விஸ்தாரமான அனுபவங்கள், அடர்த்தியான நடைமுறை வாழக்கை அம்சங்கள் அந்த வேகத்தினை நிதானப்படுத்தி கதை சொல்ல வைக்கின்றன..
அயலக வாழக்கை அனுபவம் என்ற அளவில் அ.முத்துலிங்கம் உட்பட பலரின் அனுபவதிரட்சிகளை இவரும் கொண்டிருக்கிறார்,. ஆனால் முத்துலிங்கம் போன்றோர் நிதானமொழியில் அடுக்கும் வித்தையில் வேறொரு பரிமாணத்தை எட்டி விடுவார்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும், இயல்பான வேகமெடுக்கும் மொழியில் சொல்ல வேண்டும் என்ற வகையில் சுவாரஸ்யம் சார்ந்த பரிமாணத்தில் இயங்குகிறார்.
சொந்த மண் சார்ந்த அநுபவங்கள், கஷ்டப்படும் மக்கள், உறவுகள் என்ற ரீதிக்கதைகளை உப்புக்காற்று என்று எடுத்துக் கொண்டால் வெளிநாட்டு அனுபவக்கதைகள் என்ற அளவில் மற்றவை சிரமங்களாக, தண்டனைகளாக அமைவது போல் தோன்றினாலும் அனுபவம் என்ற அளவில் அவை ” அழகான” தண்டனைகளாகவும் அமைந்து விடுகின்றன.
உப்புக்காற்றும் வெயிலும் புழுதியும் தருகின்ற அனுபவங்களாக சொந்த மண்ணின் பாம்பு பிடிப்பவனும், ஆடு வளர்த்ததில் தன் துயரத்தைப் போக்கி வாழும் பெண்ணும், அப்பா சார்ந்த அனுபவங்களும் மனிதரில் எத்தனையோ நிறங்கள் எனபதைக் காட்டி விடுகிறது.
விமானக்கூடங்களில் நடக்கும் சம்பவங்கள் பல் கதைகளின் ஆரம்பங்களாகவும் இருக்கின்றன.
வயசுக்கு வராத பிலிப்பைன்ஸ் பெண்ணுடனான அனுபவங்கள் வேறொரு பாதையைக் காட்டுகின்றன.
முஸ்லீம் சமூகம் பற்றிய பொது புத்தியலான பல விசயங்கள் உடைபடுகின்றன.
மனைவியின் நடத்தையும் கணவனின் சதேகங்களும் அயலகச்சூழலில் வெவ்வேறு விதமாய் புரிந்து கொள்ளப்படுகின்றன.
கிரிக்கெட் ஆட்டம் தரும் பொறாமை சினேகமும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன.தமிழ் மேல் கொண்ட ஈடுபாட்டு மனதின் காரணத்தால் வந்து சேரும் சின்ன சந்தோசங்கள் விலகிப்போகின்றன.மாங்கொட்டை சாமியாராக பல மனிதர்களின் எண்ணங்கள் அமைந்து விடுகின்றன.
84 வயது வெளிநாட்டு மனிதரின் உழைப்பும் தொடர்ந்து இயங்குதலும் அவரை முன்னுதாரணமாக்க் கொண்டு செயல்பட வைக்கின்றன.ஆண்பெண் உறவு சார்ந்த அம்சங்களில் வெளிநாட்டினர் போக்கு சுவாரஸ்யமான தகவல்களை நிறைத்திருக்கிறது.
மகனுக்கு போர்டிக்கோதான் அறிமுகமாகிறது சாதாரண் வீடு என்பது பேச்சளவில் கூடத் தெரிவதில்லை.
பாகிஸ்தான் பற்றிய பிமபங்களும், முஸ்லீம் பற்றிய பொதுப்புத்தி சார்ந்தவையும் குலைந்து போய் சில நல்ல மனிதர்களை அடையாளம் காட்டுகின்றன.
கடல்தாண்டிய உறவுகளில் மிகுந்த கிளர்ச்சியும் மகிச்ழ்ச்சியும் ஏற்படுகிறது. புலம்பெயர்ந்தவர்கள் ஊரோடும் உறவோடும் கொள்ளும் தொடர்பு நேரிடையாகக் குறைந்தும் இது போன்ற படைப்பாக்களில் மிகுந்தும் ஊர், மொழி, உறவு குறித்த அக்கறையாகவும் வெளிப்படுகிறது.
”ஒரு புதுப்பணக்காரன் கையில் இருந்து பணம் கொட்டோ கொட்டி என்க்கொட்டுகிறது என்றால் அது நிச்சயமாய் உழைத்த காசாய் இருக்காது “ என்பதை சொல்லும் “பெட்டோமாஸ் லைட்டுதா வேணுமா “ என்ற கதையின் அம்சத்தை பல கதைகளில் காணமுடியும்.
வேலைத்தளங்களில், பணம் சம்பாதிப்பதில் என்று. அயோக்கியர்கள் தங்களை வெளிநாட்டுச் சூழலில் உணர்ந்து கொள்ளும் அபூர்வமான அனுபங்களும் அரசியல் சார்ந்தவர்களுக்கு ஏற்படுவதைக்காட்டுகிறார்.
திக்குவாய் சம்பந்தமான கூழாங்கல் பின்னர் வெளிநாட்டு அனுபவத்தில் பெரும் பணமான விசயமாக மாறும் வித்தைக்குள் சொந்த ஊர் அனுபவங்களும் ஊடாடி நிற்கின்றன. தனித்து அயலக அனுபவம் என்று இல்லாமல் அது உப்பு பூமியின் வியர்வையோடும் கல்ந்திருப்பதை தவிர்க்க இயலவில்லை கனவுப்ரியனால்.
தொடுபூச்சி தொட்டவுடன் சுருண்டு கொள்வதைப்போல் அந்த அனுபவங்களோடு சுருண்டு கொள்ளாமல் மீண்டும் உயிர்ப்பிக்க சொந்த மண்ணீன் நினைவுகள் உபயோகப்படுகின்றன.
கொழுந்தியா வீட்டூக்கு வந்தாலே ஆனந்தவிகடன் பொங்கல் சிறப்பிதழ் இலவசமாய் சினிமா ஸ்பெஷல் என்ற பெயரில் மற்றுமொரு குண்டு புத்தகம் கிடைத்தைப் போல் ஒரு சந்தோசம் என்கிறார் ஒரு பாத்திரம். உவமை காட்டுவதில் தமிழ்த்திரைப்படவசனங்களும் ஒரு வகை பாதிப்பை உண்டு பண்ணியிருப்பதை பல இடங்களின் மொக்கை வசனங்கள் நிருபிக்கின்றன.
ஆங்கில மொழிப்பிரயோகங்களும் இந்த சேர்க்கையில் உண்டு.வழக்கமான கதை சொல்லும் முறையின் மொழியிலிருந்து வேறுபட்டு அவசரகதி மொழி வாசிப்பு முறையில் மாற்றத்தைக் கோருகிறது.
சில தண்டனைகள் அழகான தண்டனைகளாக மாற கால அவகாசம் தேவைப்படுவது போல் வெளிநாட்டு அனுபவங்களும் பிரயாண அனுபவங்களும் கொஞ்ச கால அவகாசம் எடுத்துக் கொண்டு சிறுகதைகளாகியிருக்கின்றன. அந்தந்த நாடுகள் சார்ந்த ஏகப்பட்ட விபரங்கள் , கொஞ்சம் கலாச்சார அம்சங்கள் பல இடங்களில் மவுனமாயும் இடங்களை நிரப்புகின்றன.
வெளிநாட்டு மனிதர்களின் இயல்பை வார்த்தைகளில் உருவாகுவதில் வெற்றியும் காண்கிறார். ஏன் என்ற கேள்வி என்றைக்கும் தங்கும். மனிதன் இன்பம் துன்பம் இரண்டிலும் கேள்விதான் மிஞ்சும். எதற்கும் ரொம்ப அலட்டிக்கொள்ளக் கூடாது என்று நாடு துரந்தவனின் சிறுகதையில் சொல்வது போல் சிறுகதையின் இறுக்கம், நிதானம் குறித்து அங்கலாயிப்பவர்களுக்கும் அதுவே பதிலாகிறது.
விஸ்தாரமான அனுபவங்களைத் தொலைத்து விடாமல் தேன் கூட்டில் சேர்த்து விடுகிறார்.பயண அலைச்சல் தரும் தண்டனைகளை மறந்து அனுபவ தேனாக அவை மிளிர சிறுகதைகளை தன் வசமாக்கிக் கொண்டிருக்கிறார் கனவுப்பிரியன்.
( கூழாங்கற்கள்-கனவுபிரியனின் 21 சிறுகதைகள்: 256 பக்கங்கள், 200 ரூபாய், ஓவியா பதிப்பகம், திண்டுக்கல் வெளியீடு )
Comments