சுமையா புத்தகம் குறித்து எழுத்தாளர் நாறும்பூ நாதன் அவர்களின் மதிப்புரை


சுமையா - கனவுப்பிரியனின் இரண்டாவது தொகுப்பு 
------------------------------------------------------------------------------
21
கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் " எட்டாவது அதிசயம் " என்றொரு கதையை ஆக சிறந்த கதை என்று சொல்வேன்.

மாறுபட்ட கதைக்களம்.

ராணுவத்தில் கர்னல் ரேங்கில் பணியாற்றிய ஒருவரின் கதை. 21 ஆண்டுகள் பணிபுரிந்து கால் எலும்பு முறிந்து, மனைவியை இழந்து, மகளும் சண்டையிட்டு பிரிந்து போன நிலையில், தன்னந்தனியே வாழும் அந்த மனிதருக்கும் , பூங்காவில் தினமும் உடற்பயிற்சி செய்யும் ஒரு இளைஞனுக்கும் இடையே நடக்கும் உரையாடலே இந்தக் கதை.

அவர் வீட்டில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பார்த்து அந்த இளைஞன் இது என்ன இடம் என்று கேட்க, இமாலய உச்சியில் லடாக் பகுதியில் இருக்கும் காரகோரம் என்ற ஊர் என்று சொல்லி, அது உலகின் எட்டாவது அதிசயம் என்று அதன் கதையை விவரிக்கிறார்.

காரகோரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நாட்டை தொட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இந்தியா, இன்னொரு பக்கம் பாகிஸ்தான், மற்றொரு பக்கம் சைனா, பிறிதொரு பக்கம் ஆப்கானிஸ்தான் என. இந்த மலையுச்சியில் ரோடு போடும்போது ஆயிரக்கணக்கில் இறந்த மனிதர்கள் பற்றியும், இந்த மலையுச்சியின் பெருமைகள் பற்றியும் அவனிடம் விவரித்துக் கொண்டே போகிறார்.

கடைசியில் கில்லர் மௌண்டைன் என்ற பகுதியில் உள்ள செக்போஸ்டில் அமர்ந்து கொண்டு, அவரும்,ஒரு பாகிஸ்தானி ராணுவ வீரரும், மற்றொரு சைனா வீரரும் ஒரே சிகரெட்டை குளிரில் மாற்றி மாற்றி குடித்த கதையையும் சுவாரசியமாக சொல்கிறார்.

இளைஞனுக்கு ஆச்சரியம்.

" அப்படின்னா..யாருக்கும் யாருக்கும் தான் சண்டை ?" என்று கேட்கிறான்.
"
ஜனங்களுக்கு தேவையில்லாத ஆனால் யாருக்கோ தேவையான சண்டை..ராணுவ பட்ஜெட் என்ற பெயரில் அதில் அடிக்கும் கொள்ளை, மக்கள் தங்கள் கட்சியின் மேல் கோபம் வந்தால், எதிரி நாட்டு வீரர் பத்து பேரை கொல்லலாம்..ரெண்டு நாடுமே அரசியல் செய்யலாம்..எல்லை பிரச்னை பற்றி இந்த மக்களின் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி எப்போதோ பிரச்னையை தீர்த்திருக்கலாம்.." என்று அவர் கூறும் இடம் மிக முக்கியமானது.

கர்ப்பப்பை நீக்கியதில் ஏற்பட்ட பிரச்னையில் உயிர் விட்ட மனைவி, நீ எல்லாம் ஒரு அப்பாவா என்று சண்டையிட்டு லண்டன் சென்று விட்ட ஒரே மகள்..சுயம் இழந்து நிற்கும் இந்த மனிதரின் கதையை கேட்ட அந்த இளைஞன் சொல்கிறான் : " நீங்க தான் சார் எட்டாவது அதிசயம் "

எதற்காக வாழ்கிறோம் என்றே தெரியாமல் வாழும் இந்த முன்னாள் கர்னலின் துயரமான வாழ்க்கையை இவர் இந்த கதையில் சொல்லும் போது, எனக்கு கர்னல் செல்லையா அவர்களின் நினைவு வந்தது.

மனதை பிசையும் கதை " எட்டாவது அதிசயம் "

கனவுப்பிரியனுக்கு எனது வாழ்த்துக்கள். முழுமையான விமர்சனம் பின்னால் எழுதுகிறேன்.


Comments

Popular posts from this blog

கூழாங்கற்கள் - நினைவுகள்

கூழாங்கற்கள் பற்றி தோழர் கீதா மதி

கூழாங்கற்கள் - எழுத்தாளர் வாமு கோமு அவர்கள் பார்வையில்