சுமையா புத்தகம் பற்றிய கவிஞர் தணிகை அவர்களின் மதிப்புரைசுமை(ய்)யா பற்றிய கவிஞர் Tanigai Ezhilan Maniam அவர்களின் மதிப்புரை.
கனவுப் பிரியனின் முதல் முயற்சியான "கூழாங்கற்களை" படித்த போதே ஒரு சிறுகதை மன்னர் உருவாகிறார் என்ற அறிகுறி தெரிந்தது. ஆனாலும் அது கன்னி முயற்சியாகவே தெரிந்தது. அதன் தயாரிப்பு நேர்த்தியை விட இப்போது வந்திருக்கும் அவரின் "சுமையா" என்ற இரண்டாம் குழந்தை அருமையான சுகப் பிரசவமாக வெளிப்பட்டிருக்கிறது.
ஆண்டுக்கு ஒரு நூல் வெளியிட வேண்டும் என நானும் முயன்றதுண்டு. ஆனாலும் அது 2010க்கும் பின் முடியாமல் போயிற்று. இவருக்கு எல்லாம் வல்ல இயற்கை அருள் செய்யட்டும் ஆண்டுக்கொரு நூல் இவரது காலம் வரை வெளியிட...
இவரின் எழுத்துகளை முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தோம், இப்போது நூல் வாயிலாக படிக்கிறோம். இந்த நூலைப் படித்தபின் உணர்வது என்ன எனில் இவர் நாவல் கூட எழுதலாம் அந்த வல்லமை இவரிடம் வந்து விட்டது.அந்தளவு இவரது எழுத்தில் ஒரு மேன்மை பக்குவம் மெச்சூரிட்டி வந்துள்ளது.
உறவுகள்,காதல், நகைச்சுவை,தொழில் நுட்பம், விழிப்புணர்வுக்கான புதிய செய்திகள், சமூக மேம்பாட்டுத் தா(க்)கம்,அறிவியல் ஆகியவை இவரது கதைகளில் உலகளாவிய பார்வையுடன், நிலம், நீர் , நெருப்பு, ஆகாயம்,காற்று ஆகிய பஞ்ச பூதங்களையும் மிகவும் அழகாக எந்தவித சிரமமும் எடுத்துக் கொள்ளாமலே தொட்டுச் செல்கிறது. எல்லைக் கோடற்ற மனித நேயத்தை கருவாக வைத்து.
அழகிய அட்டை, நல்ல தரமான தாளுடன் 21 சிறுகதைகளுடன் 214 பக்கங்களில் விலை160 ரூபாய்க்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்துள்ளனர்.நூலை அனைவர்க்கும் பிடித்தமான திருவில்லிப் புத்தூர் மதிப்பிற்குரிய இரத்தினவேல் அய்யா முன்னெடுத்துச் செல்கிறார் என்பதே பெரிய பலம்.மற்றபடி பிரபலத்துக்கு ஒன்றும் குறையிராது என்றே நம்புகிறேன் நூல்வனத்தின் ஒரு நல்ல நூல்.
இனி நூலைப்பற்றி அதன் கதையைப் பற்றி சிறிது சொல்ல முற்படுகிறேன். கடைசியில் எழுத்தாளரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நூல் கிடைக்கும் இரத்தின வேல் அய்யாவின் முகவரியையும் கொடுக்கிறேன்.

1. சுமையா: யுத்தம் என்பது இரு நாட்டின் மக்களுடையது அல்ல, அவர்களைக் காக்க அல்ல ஏன் போர்த்தளவாடங்களுக்கு போட்டியிட்டு தமது வளத்தை விரயம் செய்யவேண்டும் மாறாக அந்த அந்த நாட்டின் மக்களின் வாழ்வுத் தரத்தை முன்னேற்ற செலவிடலாமே என்று பிரச்சாரமாக இல்லாமல் நியாயமாக மௌனமாக தொனிக்க வைக்கிறது.

2. எனக்குப் இந்நூலில் மிகவும் பிடித்த கதை "ஆவுளியா" அரசு என்பது அரசியல் வாதி அல்ல, அதிகாரிதான் அவர்கள் நினைத்தால் எல்லாம் செய்யலாம் என்னும், இந்தக் கதையும், மண்ணெண்ணெய் குடிச்சான் இவை இரண்டும் இவருக்கு மிக நன்றாக க்ரைம் கதையும் அதன் புலமும் சொல்ல வாய்த்திருக்கிறது என்று கட்டியம் கூறுகிறது.

3. நம்பி கோயில் பாறைகள், ஜெனியின் டைரி போன்ற கதைகள் எனக்கு லா.ச.இராமாமிர்தத்தின் மயக்கு வித்தை எழுத்து மோகத்தை உண்டு பண்ணுகிறது.
கதை எழுத நல்ல உழைப்புத் திறம் வேண்டும். அது கனவிடம் உள்ளது. நிறைய இடங்களில் பென்சில் எடுத்து அடிக்கோடிட்டு இரசித்துப் படிக்க வேண்டும் என வரிகள் செதுக்கப்பட்டுள்ளன அல்லது இயல்பாகவே அப்படி வரிகள் எழுத்தோட்டத்தில் வந்து உதித்தனவா எப்படி இருந்தாலும் கனவின் முயற்சி பாரட்டப் பட வேண்டியதாகவே மறுக்க முடியாமல் இருக்கிறது.

4. உணவுப் பழக்கம் பிரிக்கும் காதலை நாமும் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் செரித்துக் கொள்ளவும் முடியாமல் ஆனால் நடப்பை, உண்மையை உள்வாங்கி ஏக்கப் பட்டுநிற்கிறோம்.அந்தக் காதலின் போலித்தனத்தை அவர்களது நண்பன் ஏற்றுக் கொள்ள முடியாதது போல நாமும் இருக்கிறோம். அந்த உணர்வை நமக்குள் ஊட்டி விடுகிறது எழுத்து.

5. பொதுவாகவே நேரிடையாக கதைசொல்லியாக இருக்கும் கனவுப் பிரியன் பலகதைகளை அப்படித்தான் சொல்லிச் செல்கிறார் ஆனால் அதையும் மீறி சில முடிவுகளில் சில இடங்களில் சில கதைகளில் காலத்தை கதை சொல்லியாக்கி நிற்கிறார் காலமாகி நின்று பதிவு செய்கிறார்.
உளுத்தங்கஞ்சி வாங்கிக் கொடுத்த கூலிக்கு காதல் கடிதம் எழுதச் சொல்லியே தீர்த்து விட்டான், கேட்கவே வேண்டாம் இருந்தாலும் கேட்போமே பேச வேண்டுமே என அது போல எங்கே போகிறாய் மாவு அரைக்கவா என்றவனுக்கு இல்லை சுடுகாட்டுக்கு என்ற பதில் அந்த இடத்தில் நாமே இருந்து இரசிக்கும் நகைச்சுவை ததும்பி நிற்கிறது.
நேற்றைய ஈரம் ‍ கதையில் மஜ்னு என்றால் பைத்தியக்காரன் என்று அரபியில் பொருள் எனக் கற்றுக் கொடுக்கிறார். உண்மையிலேயே லைலா மஜ்னு எனக் காதல் பற்றி பேசும்போதெல்லாம் பேசியிருக்கிறோம் ஆனால் மஜ்னு என்ற பெயர்க் காரணம் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
ஒவ்வொரு கதையையும் அட்டவணைப் படுத்தி உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கம் கடமைப்பாடு எனக்கு இருந்த போதிலும் புத்தகம் படித்த நெகிழ்வில் எங்கெல்லாம் தொடமுடியுமா ஆங்காங்கு தொட்டுச் செல்லவே இந்தப் பதிவில் முயற்சிக்கிறேன்.
என்னிடம் குர் ஆன் தர்ஜமா அரபி மற்றும் தமிழ் மொழியாக்கத்துடன் இருப்பதால் ஒரு கதையில் இவர் மொழி பெயர்ப்பு பொருளை சொல்லிக் குறிப்பிட்டிருப்பது சுலபமான கற்பிதமாக எனக்கு இருந்தது. படிப்பவர் அனைவர்க்கும் அது உதவி செய்யும் விதமாக அமைந்திருப்பது நன்று.

6. அது வேறு ஒரு மழைக்காலத்தில் தாத்தா பேரன் உறவு அற்புதமானதாக மாறி நிற்கிறது. பெர்முடா முக்கோணத்தின் புதிர் தற்போது விளங்கிவிட்டதான அறிவியல் செய்தியை அண்மையில் படித்தேன் இணையத்தில். ஆனால் அந்தக் கதை நேரும் நோக்கில் அவை ஒரு போதும் பிழையாக கருதப் படவே வழி இல்லாமல் இருக்கிறது.

7. மார்கோ போலோ மர்கயா போலோ, ஷாஹிர்க்கா தட்டுக்கடை, வியாதிகளின் மிச்சம் , மரியா ப்ளோன்ஷா, அன்னக்காடி எல்லாமே மிச்சமில்லா உச்சம்தான்...முக நூலில் படித்த துணிக்கடைக்கார அண்ணாச்சி இன்னும் மறக்காததால் இந்நூலில் படிக்கும்போது இரண்டாவது முறை படிக்கும் உணர்வுடன் எனக்கு...ஆனால் முதல் முறை படிப்பார்க்கு அது சில இரசாயன மாற்றங்கள் விளைக்கும்.

8. கடல் குதிரை இனத்தில் ஆண் இனம் கருத்தரிக்கும் ....அப்பா முக்கியத்துவம் குறிக்கும் பாடலை நினைவுக்கு கொண்டு வரும்.நல்ல வேளை மகன் காவல் துணை ஆய்வாளராக ஆனார் இல்லையெனில் நமக்கு அது மனக் கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கும். ஜீன்கள் பொய்யாய் போவதில்லை.

9. சூது கவ்வும், தற்கொலைப்பறவைகள் பற்றி சொல்ல வில்லையெனில் அது பெரும் இழப்பு.அன்பு கொல்லப்படுவான் நீல் கொன்று விடுவான் என எதிர்ப்பார்க்கிறோம். ஆனால் நடப்பது வேறு. இந்தியாவின் இராஜதந்திரம் இலங்கைக்கு எட்டாத ஒன்று. ஈரப்பதம் பிசுபிசுப்பு நேரம் என்னும் நீரால் கழுவினாலும் போகாமல் நன்றாக ஒட்டிக் கொள்வது கதையின் வெற்றி. கதாசிரியரின் யுக்திக்கு கிடைத்த அங்கீகாரம்.

10. தற்கொலைப் பறவைகளை மறக்க முடியவில்லை, ரசவாதம், அன்று சிந்திய இரத்தம், நீ வந்தது விதியானால் எல்லாமே இரசிக்கும்படியாக அந்த வலியை உணரும்படியாக அனுபவித்து ஜீவனுள்ளதாக எழுத்தை மாற்றி இருக்கின்றன.

வாழ்க கனவுப் பிரியன்
வளர்க இரத்தின வேல் அய்யாவின் தொண்டு.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Comments

Popular posts from this blog

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

சுமையா - சிறுகதைத்தொகுப்பு பற்றி சுப்ரா வே சுப்பிரமணியன்

கூழாங்கற்கள் - எழுத்தாளர் உதய சங்கர் அவர்களின் விமர்சனம்