சுமையா புத்தகம் குறித்து எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தின்னு மதிப்புரை

கனவுப்பிரியனின் "சுமையா" நேற்றிரவு வாசிக்கத் தொடங்கினேன். இன்னதெல்லாம் எழுதுகிறேன் என்று மூச்சுச்சத்தம் கூட வெளியேவிடாமல் அள்ளித் தெளித்திருக்கிறார். உண்மையில் கூழாங்கற்கள் வாசித்துவிட்டு நான் எதுவுமே எழுதவில்லை. 

பிறகு, கொஞ்சக்காலம் 
'
மண்ணைத்தொட்டு, காலை எடுத்தடித்து உப்புக்கோட்டைத் தாண்டி கபடி ஆடுகிற மனுசனின் கதைகளில்' மெஷின்களாய் வந்து குடிகொண்டதும் நான் அவர் பதிவுகளின் வாசிப்பில் இருந்து ஒரு சின்ன நகர்தலை மேற்கொண்டு விட்டேன். நமக்குப் புரிபடுகிற விஷயத்தில்தானே நம் ரசனை நிற்கும். 

ஆக, அந்த இடைவெளி அப்படியே இருந்தது. நேற்று அவருடைய இரண்டாம் தொகுப்பான"சுமையா" 

வாசிக்கிறபோது அதுவும் 
தகர்ந்துபோனது. நேர்மையாகச் சொன்னால் கனவுப் பிரியனின் நான் தனிப்பட்டு இன்னதை எழுதுங்கள் என்று எதிர்ப்பார்த்திருக்கக் கூடாது. அது ஒரு அதிகபட்ச அன்பினாலும் உரிமையிலும் நிகழ்ந்துவிட்ட சம்பவம். 

உண்மையிலே அவரது வட்டம் பெரியது. அவரது கதைகளும்கூட பெரும்பாலும் உலகளாவிய பார்வையோடிருப்பவை. உலக, மதத் தத்துவங்களையும், அரசியல் சிக்கல்களையும் கூட வெண்ணெக்கட்டியை வெட்டி எடுத்து பிரித்து வைக்கிற மாதிரி அதனதன் தன்மைக்கான விளக்கங்களோடு பிரித்துப்பார்க்கும் கூரான பார்வையுடையது. 

இவர்கிட்டே இன்னதுதான் இருக்குதென்றோ, இதுத்தான் வருமென்றோ எதிர்ப்பார்க்கிறதுதான் முட்டாள்தனம். தவிர அகநக முகநூல் நட்பு என்று போட்டு அவரைப் படுத்துவதும் பாவம் என்று படுகிறது. தலைவா உங்க கெப்பாஸிட்டி வேற லெவல். ஃபேஸ்புக் பாராட்டுக்கெல்லாம் அடங்காத லெவல்.

*
கனக்கச்சிதமாய் திரைக்கதை எழுதிவிட்டு, கதையை நம்பி படப்பிடிப்புக்குக் கிளம்பும் இயக்குநர் மாதிரி அவ்வளவு தன்னம்பிக்கையோடு தன் இரண்டாம் தொகுப்பில் ரொம்ப சிரத்தையோடு இறங்கி இருக்கிறார். 

சொல்லப்போனால் சில கதைகள் ரொம்பவும் எளியவை ஆனால் அதில் பேசுபொருள் ஆள்நுழையாத இடங்கள். அதுவும் தமிழ்ச் சூழலுக்குள் வந்திருக்காத பிரதேசங்களில் தன் 'படப்பிடிப்பை' நிகழ்த்தியிருக்கிறார். கதை சொல்லுகிற வடிவம், கதை பேசுகிற விஷயம் இரண்டும் அவருக்கு நன்றாகவேத் தெரிந்திருக்கிறது. 

ஆனால், கதாப்பாத்திரங்களின் சாறு எங்கிருந்து பிழியப் பட்டிருக்கிறது என்பது கண்டுபிடித்துவிட முடிகிறது. ஒருவேளை கனவுப்பிரியனை நெருக்கமாய் அறிந்தவன் என்பதால் எனக்கு இப்படித் தோன்றி இருக்கலாம். குறிப்பிட்டுச் சொன்னால் சுமையா கதை படிக்கும்போது, இரா.முருகவேள் அவர்களுடைய மிளிர்கல் நாயகியின் கதாப்பாத்திர சாரம் மனத்திற்குள் இறங்குகிறது. 

உங்களுக்கு ஒரு வாசகனாக நான் சொல்ல நினைப்பது.. ஊரில் பெரிய கடை திறக்கப் போகிறீர்கள். உருவாகப் போவது உங்கள் பிரத்யேக பிராண்ட். அது வேறொரு கடையின் பெயரை நினைவு படுத்துவதாக எப்போதும் இருந்துவிடக்கூடாது. போலச்செய்தல் என்பது நவீன குழப்பம். 

எனக்கு ஒரு எழுத்தாளரைத் தெரியும். அவர் எழுதி வெளிவராத கதை ஒன்றை இன்னொரு பெரிய மாமாங்க எழுத்தாளரிடம் சொல்லி இருக்கிறார். மாமாங்கர் அதன் சாரத்தோடு அடுத்தநாளே ஒரு பெரிய கதை எழுதி தன் ஆஸ்தான நட்சத்திரப் பத்திரிகைக்குக் கொடுத்துவிட்டார். 

இப்போது ஒரிஜினல் வெளிவரவில்லை. டூப்ளிகேட் தாறுமாறான விற்பனை. பிறகு மெல்ல ஒரிஜினல் எட்டிப் பார்க்கும் போது அது டூப்ளிகேட்டின் சாயலாக இருப்பதாகச் சொல்லி ஓரம்கட்டப்பட்டது. இது நிஜமாகவே நடந்தது. நடக்கிறது. 

நீங்கள் அசலான படைப்பாளி. கருவே இல்லாமல் அலைகிற பிரபஞ்ச எழுத்தாளுமைகள் மத்திதில் 'லாரி பின்னால நிக்குது' என்று சொல்கிற அளவுக்கு லோடு வைத்திருக்கிறீர்கள். அதைச் சரியான ரூட்டில் எழுதித் தள்ளுங்கள். உதயசங்கர் அண்ணன் சொன்னது போல்தான் நீங்கள் ஆற்றுச் சுழிக்குள் இறங்கிவிட்டீர்கள். இனி வெளியே எல்லாம் போக முடியாது. 

எங்களுக்குக் கிடைத்திருக்கும் ஊர்சுற்றி அனுபவத்தைவிட, உங்கள் தேசங்கள் சுற்றுகிற அனுபவங்கள் பெரிது என்பதை அறிவேன். நிஜமான தேசாந்திரியாக நீங்கள் இருக்கிறீர்கள். 

ஆக உங்களுக்கு நான் முன்பு ஒரு எடிட்டருக்குப் பரிந்துரைத்தேன். இப்போது உங்களுக்கு ஓர் நல்ல வாசகன் தேவை. இதுதான் உண்மை. இதைத்தான் இது பண்ணுகிறது என்று சொல்லுகிற துணிச்சல் உள்ள வாசகன். நிஜம் என்னதென்றால் வாசகன் என்பவனே அவன்தான். "கண்ணகி நல்ல வாசகி. அதனால்தான் பாண்டியனைப் பார்த்து அத்தநை 
பேர் அவையிலே உன்னை அறிந்தோ தமிழ் ஓதினோம் என்றாளாம் கண்ணகி." இப்படி எனக்குச் சொன்னவன் நண்பன் அகரமுதல்வன். 

பொன்னீலன் தன்னுடைய மறுபக்கம் நாவலை எழுதி முடித்ததும் கோவையிலுள்ள மாணவர் ஒருவருக்கு அனுப்பினாராம். 36பக்கத்துக்கு அதுபற்றின விமர்சனத்தை அவர் திருப்பி எழுதியிருக்கிறார். அடுத்த வாரமே பெட்டிப்படுக்கையோடு அவர் வீட்டுக்கேப்போய் ஒருமாதகாலம் தங்கியிருந்து நாவலை சீர் பண்ணி எழுதினாராம் பொன்னீலன். 

ஆக, உங்களைப் பொழுதன்னைக்கும் பாராட்டுகிறவர்களிடம் அன்பை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். படைப்பை எங்கே எடுத்துச் செல்லவேண்டும் என்பதில் தெளிவுற இருங்கள். அடுத்தக்கட்ட முயற்சியாக உங்களுக்குள்ளே ஊறித் திளைத்திருக்கும் பெருங்கதையைத் தொடுங்கள். தனித்துவமாய் நில்லுங்கள். 

இதெல்லாம் எனக்கு நானேவும் சொல்லிப் பார்த்துப் பழகிக்கொண்டது என்பதாலே இதை உங்களுக்கும் என்னால் சொல்லமுடிகிறது. மற்றபடி சுமையா இந்தமுறை வடிவமைப்பு, எழுத்துரு தேர்வு, அட்டைப்படம், கதைகள், களன்கள், உங்களுடைய 'ட்ரேட்மார்க் டயலாக் டெலிவரி' எல்லாமே 'பொளேர்' என்று நிற்கிறது. 

பிடித்தக் கதைகள் பற்றி பிறகு சாவகாசமாகப் பேசுவோம். சுழியை விட்டு நீங்கள் எங்கேயும் போகமுடியாது இனி. ஏன்னா நானும் தண்ணிக்குள்தான் கிடக்கிறேன். 

-
கார்த்திக் புகழேந்தி
08-01-2017



 

Comments

Popular posts from this blog

கூழாங்கற்கள் - நினைவுகள்

கூழாங்கற்கள் பற்றி தோழர் கீதா மதி

கூழாங்கற்கள் - எழுத்தாளர் வாமு கோமு அவர்கள் பார்வையில்