சுமையா புத்தகம் குறித்து எழுத்தாளர் திரு.சுப்பா ராவ் அவர்களின் மதிப்பீடு





கனவுப் பிரியனின் சுமையா படித்தேன். 

பொதுவாக ஒரு தொகுப்பில் எல்லா கதைகளும் படிக்கத்தகுந்தவையாக, ஒரே மூச்சில் படிக்க முடிந்தவையாக இருப்பது அபூர்வம். சுமையா அப்படிப்பட்டது. 

சுமையாவைப் படித்தவர்கள் எல்லோரும் சொல்வதுதான் என்றாலும் நானும் திரும்பவும் சொல்கிறேன். வேறுவேறு தேசங்கள், வேறு வேறு சூழல்களில் நிகழும் கதைகள் தமிழ் இலக்கிய உலகிற்கு புதுமைதான்.


பொதுவாக நான் ஒரு தகவல் கொண்டாடி. நான்கு பக்கக் கதை படித்தால் அதில் சின்னதாகவேனும் ஒரு தகவல் புதிதாய் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவன். அந்த வகையிலும் சுமையா எனக்கு மிகவும் திருப்தியான தொகுப்பு.
அடுத்தது தான் படித்தவற்றை, தான் அறிந்தவற்றை வைத்து கதை பண்ணும் திறமை. அதுவும் நைந்து போன பழைய நசுங்கிய அலுமினியப் பாத்திரச் சொற்களாக இல்லாமல், புதிதாய், படிக்கும் போதே மனதில் புன்னகைக்கும்படியான சொற்களில் சொல்லி கதையை நகர்த்தும் திறமை. 

அந்த வகையில் சுஜாதா, மிகக் குறைவாக எழுதி, எழுத்துலகிலிருந்து ஒரு பெரிய பத்திரிகையால் ஓரம்கட்டப்பட்ட இரவிச்சந்திரன், ம.வெ.சிவகுமார்

எனது இனிய நண்பர் EraMurukan Ramasamiபோன்றோரின் எழுத்தைப் போல் சின்னச் சின்னதாய் மின்னல் வெட்டுப் போல் மின்னும் வார்த்தைகளில் கனவுப் பிரியன் இயல்பாய் எழுதிச் செல்வது சந்தோஷமாக இருக்கிறது.
என்றாலும், ஒரு விஷயத்தில் கனவுப் பிரியன் கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்குப் படுகிறது. தகவல்களைத் தரும் ஆர்வத்தில் கதைகள் சில இடங்களில் கட்டுரையாகப் போய்விடும் அபாயம் இருக்கிறது. 

தகவல்கள் சார்ந்த கதைகளில் தகவல்கள் சொல்லப்படக் கூடாது. காட்டப் பட வேண்டும். You should not tell. You should show என்றொரு விதி இருக்கிறது. 

அடுத்தடுத்த கதைகளில் அவர் இதையும் மனதில் கொண்டு எழுதினால், நமக்கு இதைவிட இன்னும் மேலதிக சிறப்பான ஒரு தொகுப்பு கிடைக்கும். 

அதற்கு இப்பொழுதே எனது மனமார்ந்த வாழ்த்துகள் !!!

Comments

Popular posts from this blog

கூழாங்கற்கள் - நினைவுகள்

கூழாங்கற்கள் பற்றி தோழர் கீதா மதி

கூழாங்கற்கள் - எழுத்தாளர் வாமு கோமு அவர்கள் பார்வையில்