சுமையா புத்தகம் குறித்து எழுத்தாளர் திரு.சங்கர ராம பாரதி





சுமையா 

சிறுகதை அனுபவமும் , பயணக்கட்டுரை போன்ற அனுபவமும் ஒரு சேர்த்து கிடைத்த அனுபவமாக மிளிர்கிறது அன்பு அண்ணனின் சுமையா என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு . 

கூழாங்கற்கள் விமர்சனம் முதன்முதலில் நான்தான் எழுதினேன் என்ற ஞாபகம் எனக்கு . ஆனால் சுமையா கொஞ்சம் நாளாகிவிட்டது . வாசித்து முடிக்க 3 மணிநேரம் மட்டுமே . ஆனால் எழுத கொஞ்சம் நாட்களாகிவிட்டது . நிச்சயமாக புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது இந்த சுமையா . புது புது கோணங்களில் ,களங்களில் கதை சொல்லியாக தனது பணியினை சிறப்பாக செய்திருக்கிறார் அன்பு அண்ணன் கனவுப் பிரியன்....

சுமையா என்ற பெயரே என்னவாக இருக்கும் என்றளவில் சிறுகதை தொகுப்பின் தலைப்பே உள்ளே அழைத்துச்செல்கிறது . அடுத்தடுத்த கதைகளும் கருக்களும் ஆச்சரியப்படுத்துகின்றன . 

உலகம் சுற்றியவர் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் இருக்கும் பல்வேறு இடங்களும் கதையின் களங்களாக வந்துநிற்கிறது . ஏற்கனவே அனபுத் தம்பி கார்த்திக் புகழேந்தி க்கு கூறியது போல நிறைய வாசிப்பாளராகவும் திகழ்கிறார் என்பது அவர் கதையின் ஊடாக சொல்லும் செய்திகளின் மூலமாக அறிய முடிகிறது .
நம்பி கோவில் பாறைகள் மற்றும் ஜெனியின் டைரிக் குறிப்புகள் கதை படித்து முடித்துவிட்டு இரவு தூங்கும்போது அத்தனை சீக்கிரமாக உறங்கிவிட இயலாது . பயம்காட்டிவிடுகிறார் . 

அதே நேரத்தில் சில கதைகளில் எளிய மனிதர்களின் வாழ்வியலை மண்சார்ந்த பிரச்சினைகளை சொல்லும்போது எத்தகைய புரிதலோடு இந்த சமூகத்தை அணுகி வருகிறார் என்பதும் தெளிவாகிறது . 

நிச்சயமாக எனக்கு அண்ணன் ஒரு இசுலாமியர் என்பது கூழாங்கற்கள் வாசிப்பதற்கு முன்பு தெரியாது . அன்பு ஐயா N.Rathna Vel வழியாகவே அவருடைய உண்மைப் பெயர் அறிவேன் . இந்த நூலில் உள்ள கதைகள் சிலவற்றில் இசுலாம் பற்றிய செய்திகள் வருகின்றன. ஆனால் மதம் தாண்டிய மிகச்சிறந்த மனிதநேயமிக்கவர் என்பதை தன்னுடைய எழுத்திலும் தான் சந்தித்த மனிதர்கள் வழியாகவும் விளக்குகிறார்

சமகால பிரச்சினைகள் பலவற்றையும் இயற்கை , மருத்துவ கழிவுகள், கடலோர வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அதன் சுவாரசியம் குறையாமலும் மிகைப்படுத்தல் இல்லாத வகையிலும் பதிவு செய்துள்ளார் .

மொத்தம் 21 கதைகள் ...கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களம் . ஆனால் ஒவ்வொரு கதையிலும் வரும் மனிதர்கள் நம்முடனும் நிச்சயமாக பயணித்துக் கொண்டிருப்பவர்கள் . இனி அவர்களை நாம் காணும்போது நம்மை அறியாமல் சில விநாடிகள் இந்த கதைகளை மனம் அசைபோடும் . 

கதை சொல்லியாக இருப்பது அத்தனை எளிதல்ல. அது பலருக்கும் வாய்ப்பதில்லை, அது அண்ணனுக்கு மிக அருமையாக வாய்த்துள்ளது . அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு தனது பணிகளுக்கு இடையே இத்தனை ரசனையான எழுத்துக்களால் நம்மை ஈர்ப்பது என்பது ஒருவகை வரம்தான் ..

வாழ்த்துக்கள்  

Comments

Popular posts from this blog

கூழாங்கற்கள் - நினைவுகள்

கூழாங்கற்கள் பற்றி தோழர் கீதா மதி

கூழாங்கற்கள் - எழுத்தாளர் வாமு கோமு அவர்கள் பார்வையில்