சுமையா புத்தகம் பற்றி தோழர் தங்கம் வள்ளிநாயகம் அவர்களின் வாசிப்பனுபவம்






"சுமையா கதைப்புத்தகத்திலிருந்து ..."
எழுத்தாளர் திரு. கனவுப் பிரியன் அவர்களின் நூலான "சுமையா "வில் எனக்குப் பிடித்த கதையில் நான் ரசித்த பகுதிகள் இதோ உங்களுக்காக..!!
இது ஒரு இலக்கிய நிகழ்வுக்கு வழிகோலியதால் இக்கதையினைத் தேர்வு
செய்தேன்.
கதையும் விமர்சனமும் சேர்ந்தே இருப்பதால் சற்று நீளமான பதிவே.
பொறுமையாக மூச்சு விட்டு படிக்க வேண்டுகிறேன் .
கதையின் தலைப்பு  : "நேற்றைய ஈரம் "
ஒரு காதலன் ,காதலி ,நண்பன் இந்த மூன்று பேருக்கும் இடையே நிகழும் கதை .
அழகான காதலன் ,தன் சுமார் மூஞ்சி
குமார் நண்பனுடன் 'ரைஸ்மில்' நோக்கிச்
செல்லும் தன் காதலியை சைக்கிளில்
தொடர்கிறான்.
'அவளிடம் என்ன பேச என நண்பனிடம்
யோசனை கேட்கிறான் '-காதலன்.
'ஹலோ மாவரைக்கப் போறீங்களா..?என
ஆரம்பித்து ,பின் காய்கறிக்கடை ,கோவில், பஸ் ஸடாப்,
ஸ்கூல் வாசல் என நீள்கிறது.
தன்னைப் பார்த்து சிரித்த காதலியைப்
பார்த்து சந்தோஷப்பட்டு (கிரீன் சிக்னல்
கண்ட கார்க்காரன் போல ) தன் நண்பனிடம் 'ஏதாவது எழுதித் தாடா' என்ற கெஞ்சலுக்குப் பின் 'அன்புள்ள மான்விழியே ,ஆசையில் ஓர் கடிதம் என்று
உயிர் எழுத்தில் தொடங்கி எழுதப்பட்டது.
காதலியின் பதில் கடிதத்தை நண்பனிடம்
நீட்ட ,கலர் பென்சிலால் ஆர்ட்டின் படம்
வரைந்து உள்ளே 'அன்புள்ள மரமண்டைக்கு எத்தனை முறை தான்
ஜாடையாகக் கூறுவது சம்மதம் என்று '
என 'நச்சென்று ' சொல்லியிருப்பது
நவீன காலத்து பாணியாக மிக ரசிக்க
முடிகிறது .
'நான் இதைப் பத்து முறை வாசிச்சாச்சு '
எனக் காதலன் கூறுவதில் இருந்து 'பொக்கிஷமாக ' மனதில் உறுதி செய்யும்
முத்திரை பதிக்கப்படுகிறது .(கடிதத்தில்)
பதிலுக்கு நாமும் ஏதாவது எழுத வேண்டும்
என நண்பனிடம் சொல்ல ,'உளுந்தங்கஞ்சி ' வாங்கிக் கொடுத்ததற்கு நல்லாவே வேலை வாங்கிறானே !என நினைக்கும் யதார்த்தம்
மனதில் பளிச்சிடுகிறது .
ஒருவழியாக மழைக்கு முன்வரும் குளிர்
காற்று ,பூக்கள் சிதறிய வீதி எல்லாம் எழுதி அழகி என்று எழுதிவிட்டு உன்
பெயரை எழுதுவதா இல்லை அழகி என்ற
சொல்லுக்குப் பதிலாக உன் பேரை எழுதுவதா எனத் தமிழுடன் சேர்ந்து
நம்மை காதல் உச்ச அன்பிற்கு அடையாளப்படுத்துகிறார்.
ஒருநாள் வெள்ளிக்கிழமை சிவன் கோவிலில் காதலி பூசாரியிடம் அர்ச்சனை செய்யச் சொல்கிறாள்.
அவர் என்ன நட்சத்திரம் ?என்ன கோத்திரம் ..? என வினவ தெரியாது எனச் சொல்லுகிறாள் காதலி.
என்ன பேரு ..? என மீண்டும் கேட்க,
"
ஆஷிக் " என்று கூற பூசாரி முறைத்த
வண்ணம் சென்றதாக காதலி 'ஜெயந்தி'
நண்பனிடம் கூறுவது நகைச்சுவையுடன்
மனதில் ஒரு புரட்சி எழுகிறது .(அப்பாடி..!
நாயகன்,நாயகி பேர் சொல்லியாச்சு )
ஒருநாள் சாயங்காலப் பொழுதில் ஒரு
அகண்ட ஆறுப்பகுதியில் காதலர்கள்
சந்திப்பு .கண்ணுக்கெட்டிய தூரம் வரை
ஆறும் கூடவே மணலும் "மோகமுள்"
கதையில் ஜானகிராமன் சொல்லுவாரே
அதைப் போல ஒரு ஆற்றுப்படுக்கை .
(இந்த இடத்தில் அந்த இடத்தை வர்ணிக்க மூத்த எழுத்தாளர் 'ஜானகிராமன்' அவர்களை விட நான் பெரிசாக சிலாகித்து ,வர்ணித்து
ஒன்றும் எழுதிவிடப் போவதில்லை என
அவரை ஆற்றுப்படுத்தி இருப்பது புரிகிறது.
இதன் மூலம் மூத்த வாசகர்களுக்கு 
அப்புத்தகத்தை எடுத்து அப்பகுதியை
வாசிக்கத் தூண்டுகிறார் . இளைய வாசகர்கள் நினைவலைகள் வந்து மோத,
அடுத்த புத்தக கண்காட்சியில் 'மோகமுள்'
புத்தகத்தைத் தேட வழிகாட்டியுள்ளார்.)
காற்றில் நாயகியின் 'சிபான்
சேலை ' பறந்து வந்து நாயகன் முகத்தைத் தொடுவதும் ,அவள் முந்தானைச் சேலையை மடக்குவதும் அது
மீண்டும் வந்து அவனைத் தொடுவதுமாக
விளையாடிக் கொண்டிருக்கிறது .
'நான் நல்லா ஜோசியம் பார்ப்பேன் ,கையைக் குடு ' என்றவனிடம்
சிரிப்புடன் 'அப்புறம் ' என அவள் உதட்டைச் சுழித்துக் கூறிய ஒற்றை
வார்த்தை உலகிலே சக்தி வாய்ந்த,
ஆளைக் கறங்கடிக்கும் பெண்களின்
ஜாடை மொழி என அனைத்து ஆண்களுக்கும் 'மொழிப் புரிதல்' பாடம்
நடத்தியுள்ளார் ஆசிரியர்.
காதலருக்கு டிப்ஸாக : (ஜமுக்காளம்
போன்ற நைட்டியுடன் காதலியைச்
சந்திப்பவன் வாழ்வில் துர்பாக்கியசாலி.
இந்த வரியை வாசிக்கும் பெண்களுக்கு
சேலை கட்டும் நிலையை ,பண்பாட்டை
ஜாடையாக ரசிக்கும் வண்ணம் உணர்த்துகிறார்.ஆண்களுக்கு ரசிக்கும்
கலையை காற்றின் தூதாகச் சொல்கிறார்.
அவள் தலையில் வைத்திருந்த பிச்சிப்பூவின் வாடை ,ஆற்றையே மோகம்
கலந்து இழுக்க,இருட்டு சாதகம் ஆக
'
புது மொபைல கையில் வாங்கியவன்
போல ' அவன் பரபரக்க என்னும் புதிய
வர்ணிப்பு வாசகர் மனதை நிச்சயம் கவரும் .நவீன உவமானம்...!!
ஏழு மாத இடைவெளிக்குப்பின் ஒரு நாள்
பஸ் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து ,கண்களில் தாரைதாரையாக 
நீர்வார்க்க செல்லும் ஜெயந்தியை 
 
நண்பன் பார்க்க ஆஷிக் வீடு செல்கிறான்.
அங்கு ஆஷிக் "நாங்க பிரிஞ்சிட்டோம்"
என்று சொல்லும் இடத்தில் அவளின்
காதலன் மரித்திருந்தான் என அழகான
வார்த்தைப் பிரயோகம் நம்மை நெகிழ
வைக்கும்.
'என்ன பிடிக்கல..?என்ற நண்பனின்
கேள்விக்கு ஆஷிக் பதில் ....
'அவங்க அண்ணன் ஒருநாள் பன்னிக்கறி
வாங்குறதைப் பார்த்தேன்.நீங்க சாப்பிடுவீங்களா அதைன்னு கேட்டேன்.
ஆமான்னு கூலா சொன்னா.என்ன நீ
சாப்பாட்டுல எல்லாம் கண்டிஷன் போடுறேன்னா....'
ரொம்ப தர்க்கம் பண்ணினதால நமக்கு
செட்டாகாதுன்னு அன்னைக்கே முடிவு
செஞ்சி விலகிட்டேன்.
'என்னடா,இது ஒரு குத்தமாடா'- நண்பனின் மனது கலக்கத்தில்
நாமும் ஒன்றுகிறோம்.
'குத்தம் தான்,மாட்டுக்கறி திங்கிறான்னு
ஆளையே கொல்லுற நாடு இது. நான்
வெறும் காதலைத்தான் கொன்னுருக்கேன் என்ற 
வார்த்தைகளுடன் அந்தக் காதல் இறந்து போனது .
இதில் வெறும் காதல் மட்டுமே சொல்லப்படவில்லை.எப்படி காதலின்
போது மற்ற விஷயங்களுக்கும் அதிக
முக்கியத்துவம் தரவேண்டும் என்பதையும்
எழுத்தின் மூலம் மனதிற்கு கடத்தப்படுகிறது .
நடந்து முடிந்த காதலர்களிடம் காதலை
கற்றுணர்ந்து ,நடக்கும், நடக்கவிருக்கும்
காதலர்களுக்கு அதற்கான வழிவகை
கதை முழுவதும் எழுத்தாளரால் சொல்லப்பட்டிருப்பது எதிர்காலத்தில்
ஒரு 'புரிதல் காதலுக்கு வழிவகுக்கும்'
என நம்புவோமாக...!!

காதல் தோற்றுப் போனால் கூட மனதிற்கு ஒரு ஏகாந்தத்தையே தருகிறது
அல்லவா..?

Comments

Popular posts from this blog

கூழாங்கற்கள் - நினைவுகள்

கூழாங்கற்கள் பற்றி தோழர் கீதா மதி

கூழாங்கற்கள் - எழுத்தாளர் வாமு கோமு அவர்கள் பார்வையில்