கூழாங்கற்கள் பற்றி தோழர் லதா அருணாசலம்
கூழாங்கற்கள்..
அருமை நண்பர் கனவுப்ரியனின் புத்தகம் கையில் தவழ்ந்த நாளிலிருந்து , ஒவ்வொரு கதையாக
வாசித்து வந்தேன். புத்தகம் பற்றி எழுத வேண்டும் என்ற பேரவா உந்திக்
கொண்டிருந்தாலும் , அந்த முயற்சி ஏனோ தாமதமாகிக் கொண்டே இருந்தது.. இன்று, ஒரு அமைதியான
மாலையில் , மனதில் கூழாங்கற்களின் குளிர்ச்சி அலை மோத , எழுதும் கணம்
சாத்தியமாகி இருக்கிறது..
இந்தப் புத்தகத்தில் இருக்கும் பல கதைகள் ஏற்கெனவே நான் வாசித்து, வியந்து , மகிழ்ந்து
சிலாகித்தவை..இருப்பினும் புத்தகமாக, ஒரு தொகுப்பில் அந்தக் கதைகளை
பார்த்த போது அது ஒரு மகிழ்ச்சியான ,வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
புலம் பெயர்ந்து செல்பவர்களின் மனதில் தாய் நாட்டைப் பற்றிய தாகம்
நீங்காமல் இருந்து கொண்டே இருக்கும்..நிகழ்காலத்தில் நாட்டைப் பிரிந்து இருப்பதால்
கடந்த காலத்தை எப்போதும் நினைவில் பசுமையாக வைத்துக் கொண்டு அசை போடுவார்கள்.
ஒவ்வொரு மனிதரிலும், கையில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தாய் மண்ணைச்
சேர்ந்தவர்களோடு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். அந்தப் பிணைப்பு அனுபவமாக
மனதில் தங்கி விடும்.
அந்த அனுபவத்தை மனதில் உள்வாங்கி அழகான கதைகளாக மாற்ற
கனவுப்ரியனால் முடிந்திருக்கிறது.
தொழில் நுட்பங்களை கதையின் ஊடே புகுத்தி, அதை எளிய
வார்த்தைகளில் வாசிப்பவர்களுக்குக் கடத்தி அதை ரசிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல.
அந்த வகையில் மேட் இன் சைனா என்ற கதை ஒரு விஞ்ஞானச் சிறுகதை என்றே சொல்ல வேண்டும்.
அதில் நினைவடுக்கிலிருந்து மீட்டெடுக்கும் கல்லூரி கால ப்ராஜக்ட் , அதன்
சூட்சுமங்கள்,அதை உபயோகப் படுத்தி புதிய தொழில் நுட்பத்தோடு இணைக்கும் போது , அதில் ஒரு தேர்ந்த
கதைசொல்லியின் உத்தி தெரிகிறது..அதே போல்,ஜைனப் அல் பர்கர் என்னும்
கதையிலும், அறிவியல் கதையோடு அரபு நாட்டு இசுலாமிய பெண்களைப் பற்றிய பொதுவான
கருத்தை கட்டுடைத்து அவர்களும் அறிவுத் தாகம் மிகுந்தவர்கள் , இயல்பான எளிய
வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று தெரிவிப்பதில் மெலிதான கோபமும் , ஆற்றாமையும்
வெளிப்படுகிறது.
பல கதைகளில் உப்புச் சுவையும் கருவாட்டு வாசமும் மெலிதாக நாவில்
படர்ந்து செல்கிறது. ஊர்மணம் கமழ்கிறது..கனவுப்ரியனை நான் எப்போதும் யதார்த்த
எழுத்தின் நாயகன் என்றே கூறுவேன்..சாதாரணமாக நாம் கடந்து செல்லும் விஷயங்களை
மனதில் ஆவணமாக்கி , கதையாக்கி விடுவார். பக்கத்து வீட்டிலோ, தெருவோர
மளிகைக் கடையிலோ,உப்பளத்தின் நடுவே அமைந்திருக்கும் சிறு கூரை வீட்டிலோ , அரபு நாட்டின்
மூலையில் இருக்கும் சிறு பாலைவன நகரத்தில் கூட ஒரு கதையை ஒளித்து வைத்திருப்பார்.
தட்டானின் இருப்பில் மழையை அறிந்து கொள்ளும் நுண்ணறிவு வியக்க வைக்கிறது. அந்த
வகையில் உப்புக் காற்றும், களிமண் வீடும் நம்மை அந்தக் கதைகளின் களத்துக்குள் ஒரு மெய்நிகர்
கனவு போல் இட்டுச்சென்று விடுகிறது.
கதைகளில் எழுத்தாளர்கள் தம் மனதை, மனதின் ஆழத்தில் இருக்கும் சில
அழிக்க முடியாத எண்ணங்களை அங்கங்கே அழுத்தமாக பதித்துச் செல்வர் என்று
சொல்வார்கள். அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, 'அப்பா' என்னும்
ஆளுமையை பல கதைகளில் ஆதர்ச நாயகனாக சித்தரித்துள்ளார். களிமண் வீடு, நெற்றித்
தழும்பு கதைகளில் அப்பா வாக வரும் பாத்திரங்களில் ஒரு ஹீரோயிசம் இருக்கிறது.
தொகுப்பின் தலைப்புக் கதையான கூழாங்கல்லிலும் கூட ஓர் தந்தையின் ஏக்கமும்
தியாகமும் பெருமளவில் நிரம்பியிருக்கிறது . தந்தைக்கு ஒரு சமர்ப்பணமாக மனதை நெகிழ
வைக்கும் கதைகள் அவை.
இந்தத் தொகுப்பில் எனது பிரியத்துக்குரிய கதைகளாக வடிவு, சந்த மடம், பனங்கொட்டை
சாமியார் ஆகிய கதைகளை சொல்வேன்..மூன்று கதைகளின் மாந்தர்களுமே வயதானவர்கள், தனிமையில்
வாழ்பவர்கள், மனச் சிக்கல் நிறைந்த ஆளுமைகள்.. சந்தமடத்தில், ஐயப்பன்
எதிலும் ஒட்டாமல் வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொள்பவர், வடிவு , எந்த
விழுமியங்களுக்கும் உட்படாமல் தனது அகந்தையில் , தனிமையில் மனப் பிறழ்வு கொண்டவளாக
வாழ்ந்து மடிகிறாள். எனக்கு வடிவு பற்றி மட்டுமே தனியாக ஒரு பதிவு இட விருப்பம்.
பனங்கொட்டை சாமியாரில் வரும் குமாரசாமி , வயதான காலத்தில் , பிள்ளைகள் கை
விட்ட போதும், தனிமையையும் வறுமையையும் வென்று தன் சக நண்பர்களின் வாழ்விலும்
நம்பிக்கை ஒளி ஏற்றுகிறார். மூவருமே கனவுப்ரியனின் எழுத்தின் வழியே மனதுக்கு
நெருக்கமாகிப் போகின்றனர் .
கதைகளின் மற்றொரு குறிப்பிடும் அம்சம் அதில் இழையோடும் மெல்லிய
நகைச்சுவை. வட்டார வழக்கு நன்கு கைவசப்பட்டிருப்பதால், உரையாடல்களில்
இயல்பாகவே பகடி ஊடுருவி இருக்கிறது. வாசிப்பில் அது ஒரு கூடுதல் சுவையாக
கலந்துள்ளது.
பெண்களைப் பற்றி பொதுவாக ஒரு நேர்மறையான கருத்தையே பெரும்பாலான
கதைகள் பிரதிபலிக்கின்றன. ஆனால் வடிவு தவிர வேறு எந்தக் கதையிலும் பெண் என்பவர்
மையப் பாத்திரமாக இல்லை. ஒரு ஆணின் பார்வையிலிருந்து மட்டுமே அவர்கள் சித்தரிக்கப்
பட்டுள்ளார்கள் . ஜூவானா என்னும் பிலிப்பினோ பெண், தனிமையில் ஒரு பெண் கொண்டிருக்க
வேண்டிய மன உறுதியைக் கொண்டிருப்பதிலும், நிலைமையை கை மீறாமல் கையாளும்
பக்குவத்திலும் மனதைக் கவர்ந்து விடுகிறாள்..ஆனால், கதையின் இறுதியில் தெரிய வரும்
அவளது உடல் குறைபாடு ஏதோ திணிக்கப்பட்ட காரணமாகவே தோன்றுகிறது. அந்தக் குறை
இல்லாவிட்டாலும் கூட கதையில் அதே அடர்த்தி இருந்திருக்கும். ரஃபீக் ஜி மெயில்.காம்
கதையில் வரும் ஷமீமா , புலம் பெயர்ந்து வாழும் ஒரு மனிதனின் மிகுந்த மன வலிமை கொண்ட
மனைவியாக மிளிர்கிறாள்.
கதைகளில் நிறைகள் நிறைந்து இருந்தாலும் சில விஷயங்கள் மனதை
நெருடுகின்றன. எதிர்மறை கதை மாந்தர்கள், கடத்தல் கார்ர்கள், ஏமாற்றிப்
பிழைப்பவர்களை திறமைசாலிகள் போல சித்தரிப்பதும், அவர்களும் பாவத்தைக் கழுவ நல்ல
காரியங்களை மாற்றாகச் செய்கிறார்கள் என்று நியாயப் படுத்துவதும் மனதில் ஒட்டாமல்
கேள்விகளையே விதைக்கிறது. கதைகளில் வரும் உருது, அரபி, ஆங்கிலச்
சொற்கள், நீண்ட அறிவியல் பதங்கள் கொஞ்சம் அயற்சியைத் தருகின்றன. கதைக் களம்
பெரும்பாலும் அரபு நாடுகளாக இருப்பது ஒரு கட்டத்தில் வாசிப்பவர்களை களைப்படையச் செய்யக்
கூடும். வேறுபட்ட களங்கள் கொண்ட கதைகளை சரிவிகிதமாக தேர்ந்தெடுத்து வரிசை மாற்றிப்
போட்டால் இதை நிவர்த்தி செய்து விடலாம்.
எனது இந்த நூல் விமர்சனத்தில பெரும்பாலும் கதைகளில் உலவும் தனி
மனித ஆளுமைகளைப் பற்றியே எழுதியுள்ளேன். கரிசல் மண்ணின் மொழி, காயலின் உப்பு
வாசம், அரபு நாடுகளின் மணற் துகளோடு விரவிக் கிடக்கும் ஏக்கங்கள்,அந்நிய
நாட்டில் மேலோங்கி நிற்கும் நட்பின் மேன்மை, தந்தை என்னும் ஆளுமையின் மாறாத
அன்பு, பெண்களின் மன உறுதி, மற்றும் நான் என்றுமே கொண்டாடும்
கனவுப்ரியனின் யதார்த்த நடை என அத்தனை வாழ்வியல் அழகுகளோடும் புதிய பாதையில் மனம்
நிறைந்த குளிர்ச்சியோடு நம்மை பயணிக்க வைக்கிறது கூழாங்கற்கள்..
வாழ்த்துகள் கனவுப்ரியன்.
வாழ்த்துகள் கனவுப்ரியன்.
நைஜீரியா
Comments