கூழாங்கற்கள் பற்றி நண்பர் பரிமேலழகர் பரி
பரி நூலகம்.
'கூழாங்கற்கள்'.
சிறுகதைத் தொகுப்பு.
கனவுப்ரியன்.
சிறுகதைத் தொகுப்பு.
கனவுப்ரியன்.
சிறுகதை என்பது ஒரு படைப்பாளிக்கு எப்போதும் மிகப்பரிய கடுமையான
சவால். கவிதைகள் எல்லாம் ஜஸ்ட் ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போலத்தான். ஒரு கருத்தை
வரிகள் மடக்கிப் போட்டுவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. நாவல், குறு நாவல் கூட
பெரிய கஷ்டம் என்றில்லை, ஒரு அத்தியாயத்தில் சொதப்பி விட்டால் இன்னொரு அத்தியாயத்திப்
பிக்கப் செய்து கொள்ளலாம். கட்டுரைகளுக்கு ஒரு நல்ல நூலகமும், கூகுளும்
போதும். சுமாராக எழுதிவிடலாம்.
ஆனால் சிறுகதை அப்படி இல்லை. அதிகபட்சம் நான்கு A4 பக்கங்களுக்குள்
யாரோ ஒருவரின் வாழ்வின் ஒரு மைக்ரோ செகண்ட் துளியை ஒரு விஸ்தாரமான கவர்ச்சியான
கண்கவர் ஆரம்பம், தெளிவான ஓட்டம்,
ஒரு ட்விஸ்ட், ஒரு அதிரடி
பயங்கரமான பன்ச் முடிவுடன் சொல்லியாக வேண்டும். இவற்றில் எது குறைந்தாலும் வாசகன்
சிறுகதையின் முதல் இரண்டு பாராக்களுக்கு மேல் படிக்க மாட்டான். நான்கு பக்கம்
மாங்கு மாங்கென்று எழுதியது மாங்காய் ஆகிவிடும்.
இதில் துரதிர்ஷ்டவிதமாகத் தமிழ்ச் சிறுகதைகள் கொஞ்சம் ஸ்டீரியோடைப்
தனமானவை. தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்கட்டும், பொதுவாக
அனைத்து சிறுகதை எழுத்தாளர்களுக்கும் ப்ரத்யேகமான பாணி மட்டுமல்ல, ஒரு விதக்
குறிப்பிட்ட கதைக்களன்கள்தான் இருக்கும் - வாத்தியார் சுஜாதா தவிர. வாத்தியார்தான்
ஒரு மதுரை ஜி ஹெச்சின் வெளி நோயாளிகள் பகுதி முதல் விண்வெளியில் நிலவின்
தரைப்பரப்பு வரை சிறுகதைகளில் வெரைட்டியாகப் பாய்ந்தவர்.
மற்றபடி ஒரு சென்னை எழுத்தாளர் என்றால் மைலாப்பூர், திருவல்லிக்கேணி, மெரீனா, அண்ணா சாலை, ஆஃபீஸ்
அட்ராசிட்டீஸ் என்று ஒரு வட்டம். காவேரிக்கரைக்காரர்களுக்குப் பெருமாள், அம்மா, அக்கா, படித்துறை, பிரகாரம்
இத்யாதிகள். நெல்லைக்காரர்களுக்கு இருக்கவே இருக்கிறது தாமிரபரணி, நெல்லையப்பர்
காந்திமதி, நெல்லை மண்ணின் வெள்ளந்தித் தன்மை எட்ஸெட்ரா. சிவகாசித் தீப்பெட்டி
/ பட்டாசுத் தொழிற்சாலைகள், சைக்கிளில் ஆடைகள் விற்று வரும் வியாபாரிகள், மாட்டு ஆட்டுச்
சந்தை, கருவேலமரம் போன்றவை கரிசல் இலக்கியத்தின் கருங்கல் தூண்கள்.
இதில் கூழாங்கற்களின் பெரிய சிறப்பம்சமே இக்கதைகள் வாழ்வின், பூமியின் எல்லா
நிலைகளுக்கும் பயணிப்பவை என்பதுதான். தூத்துக்குடி உப்பளம் முதல் தோஹா ஏர்போர்ட்
வரை சகலவிதமான உணர்வுகளும் சகலவிதமான பரிமாணங்களில் ஒவ்வொரு பக்கத்திலும்
பரிமளிக்கின்றன - தூத்துக்குடி அழகுவிலாஸின் சீனிக்கருப்பட்டி ஜிலேபி முதல்
சிரியாவின் இறைச்சி கபாப் வரையிலான சுவைகளைப் போல.
கூழாங்கற்களுக்குப் பின்னால் இவ்வளவு க்ரைம்தனமான உலகளாவிய பின்னணி
இருப்பது ஆச்சரியம். மருத்துவத் துறையின் எண்டாஸ்கோப்பியின் நவீனமாக்கப்பட்ட
வடிவம் இங்கு ஒரு தமிழ்ச் சிறுகதையில் நமக்கு அறிமுகமாகிறது. உப்பள முதலாளியின்
இரண்டாவது திருமணத்திற்குச் சொல்லப்படும் 'அடடே'த்தனமான காரணம்
மிகவும் ரசமானது.
இளமையில் பிரிந்து போன உறவுகள் இலங்கைப் பெரு நகரத்தில் மறுபடியும்
அறிமுகம் ஆகிறார்கள். அறிவியல்,
பொறியியல் பட்டதாரிகளின்
ப்ராஜெக்ட் வொர்க் களேபரம் கலக்கல். இஸ்லாமியப் பெண்களைப் பற்றிய உலகின் பொதுவான
சில கற்பனைகளுக்குச் செருப்படியும் விழுகிறது ஒரு கதை முடிவில்.
உள்ளடக்கம் இப்படி அமர்க்களம் என்றால் கனவுப்ரியனின் வெள்ளந்தி நடை
எளிமையான ஆடம்பரம். கண்களையும்,
மனசையும் சோர்வடைய விடாத சிறு
சிறு வாக்கியங்கள், வர்ணனைகளால் ஆன வாழ்க்கையின் போன்ஸாய்க் கட்டமைப்பு. இரண்டு
வரிகளுக்கிடையே மிகவும் போதிய அளவு இடைவெளி விட்டு அச்சடிக்கப்பட்டிருப்பது ரீடிங்
க்ளாஸைத் தேடாமலேயே படிக்கப் பெரிதும் உதவுகிறது.
திரு. அர்ஸியாவின் அணிந்துரையில் தேவையற்ற ப், த், ச்
ஒற்றெழுத்துக்கள் ஆதிக்கத்தைத் தவிர்த்திருக்கலாம். மற்றபடி, 'கூழாங்கற்கள்' தமிழிற்குக்
கிடைத்த உலகளாவிய பரப்புக் கொண்ட கோஹினூர் வைரக்கல்.
பரிமேலழகர் பரி
Comments