கூழாங்கற்கள் பற்றி தோழர் கீதா மதி

ஒரு புத்தகத்தின் உள்ளார்ந்த சாரத்தை வாசிக்குமுன் அந்நூலுக்கான அணிந்துரை, வாழ்த்துரைகளின் பக்கம் செல்வதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். வாசிக்கக்கூடாது என்றில்லை.. மற்றவர்களின் கருத்தோட்டம் நம்முடைய கண்ணோட்டத்தைப் பாதித்துவிடக்கூடும் என்ற பயமே காரணம். ஆனால் என்னுரை என்னும் எழுத்தாளரின் தன்னுரை விலக்கு. கூழாங்கற்களில் கனவு ப்ரியனின் தன்னுரையே ஒரு சிறுகதையென எடுத்தவுடனேயே மனம் நெகிழ்விப்பது சிறப்பு. தகப்பன்சாமிகளை வாழும் காலத்தில் கொண்டாடாது தவிர்த்த, அல்லது ஆராதிக்கத் தெரியாத அத்தனை உள்ளங்களையும் ஏங்கச்செய்யும் அற்புதமான உரை.
கனவு ப்ரியனின் கதைகளில் மனம் பாதிக்கும் ஒரு பொதுவான விஷயம், பணிநிமித்தம் தத்தம் சொந்த மண்ணையும், உறவுகளையும் விட்டுப்பிரிந்து அயல்மண்ணில் வாழவேண்டிய சூழலில் சிக்கியிருக்கும் மனிதர்களின் மனப்போக்கு. சின்னதாகவோ.. பெரியதாகவோ.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலட்சியம்.. அதை அடையவேண்டி அவர்கள் ஓடும் ஓட்டம்.. குறுக்கிடும் இன்னல்கள்தாண்டும் தடைகள்.. சிலருக்கு அவர் லட்சியத்தை அடையுமுன்னரே வாழ்க்கை முடிந்துபோய்விடுகிறது. சிலருக்கோ லட்சியம் தன் உருவை மாற்றிக்கொண்டே இருக்கிறதுவாழ்க்கை இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது.. இன்னும் சிலருக்கோ லட்சியம் எது என்பதே உருத்தெரியாமல்.. கண்டறிய இயலாத லட்சியத்தை காணாப்பெருவெளியில் கண்டறிவதே லட்சியமாய்எத்தனை விதமான கதாமாந்தர்களை நம் கண்முன் கொண்டுவந்து காட்சிப்படுத்துகிறார்
வீடு துறந்தவன், ஊரைத் துறந்தவன், நாடு துறந்தவன், நல்வாழ்க்கை துறந்தவன், உறவு துறந்தவன், உண்மை துறந்தவன், மகிழ்வைத் துறந்தவன், மானத்தைத் துறந்தவன் என்று துறவு சூழ் உலகின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கதைக்குள் தன்னிலையாகவோ, படர்க்கையாகவோ நமக்கு புத்தகம் முழுக்கப் பரிச்சயப்படுத்தியபடியே இருக்கிறார். ஆச்சர்யப்படத்தக்க விதமாய் எந்தச் சிறுகதையுமே அவலச்சுவையூட்டுவதாய் இல்லாது, நிர்பந்திக்கப்பட்ட வாழ்வை நெஞ்சத் துணிவுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதாகவே அமைந்திருப்பது சிறப்பு. ஜைனப் அல் பாக்கர், பிலிப்பைனி பெண் ஜூவானா, சமீமா, வித்யா விஜயராகவன் போன்ற தன்னம்பிக்கைப் பெண்களை வாசிக்கையில் மனம் நிறைவது உண்மை.
முதல் கதையாக இந்த மடம் இல்லைன்னா சந்த மடம் ஐயப்பன் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட கையோடே, கதைத் தலைப்பு நினைவுக்கு வந்து முடிவை யூகிக்க வைத்துவிடுகிறது. ஐயப்பன் போன்ற தன்னலமற்ற, வீரியமிகு குணாதிசய மாந்தர்களை ஒரு இடத்தில் கட்டிப்போட்டு வைப்பது என்பது வெள்ளத்தை அணைபோட்டுத் தடுத்துவைப்பதைப் போன்றதுதான். நாம் வழியுண்டாக்கித்தரவில்லையெனில் என்றாவது ஒருநாள் அதுவே கரையுடைத்துத் தனக்கானப் பாதையில் பயணப்பட்டுவிடும்.
கூழாங்கற்கள் கதையில் ஒரு வெளிநாடு வாழ் தகப்பனின் பிரிவுத்தவிப்பும், பணியிடத்தில் உண்டாகும் சிக்கல்களை ஆற்ற வழியில்லாத வெறுமையும் தனிமையும் மிக அழகாகக் காட்டப்படுகிறது. இறுதிவரை படபடப்போடு வாசிக்கவைத்த கதை. சுபமாய் முடித்ததில் திருப்தி.
களிமண் வீடு கட்டிய அனுபவத்தை நகைச்சுவையோடு சொல்லியிருப்பது நல்ல ரசனை. இறுதிவரை ஏதோவொரு எதிர்பாராத் திருப்பத்தை எதிர்பார்த்தே கதையை நகர்த்திய மனத்துக்கு இறுதியில் நானே ஒரு குட்டுவைத்தேன். நெகிழவைத்தக் கதை குண்டு பாகிஸ்தானி. உருவு கண்டு குறள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
வடிவு போன்ற கதாமாந்தர்களை நாமும் நம் வாழ்க்கையில் சில தருணங்களில் எதிர்கொண்டதுண்டு. ஆடுகள் மீது கொண்ட பற்றும் பாசமும் ஆட்களை விட்டு அவளை விலகச்செய்து ஒரு மனநோயாளியாகவும் மாற்றியிருக்கிறதென்றால் அந்த ஆடுகள் அவள் பிரிவை எண்ணிக் கண்ணீர் விடுவதில் ஆச்சர்யம் என்ன?
மேட் இன் சைனா கதையில் வரும் கல்லூரி கால ப்ராஜக்ட் அனுபவம் அப்படியே என்னுடைய பாலிடெக்னிக் ப்ராஜெக்ட் அனுபவத்தைக் கிண்டிக்கிளறி வெளிக்கொணர்ந்து பழையநினைவுகளில் மூழ்கடித்துவிட்டது. நெற்றித்தழும்புக்குப் பின்னாலிருக்கும் கதை சுவாரசியம். வானமும் கடலும் பயணிக்கதான் லாயக்கு. மற்றபடி தரைதான் எப்போதும் சுகம் என்ற வரிகள் ஆழமாய் மனம் தைக்கும் உண்மை!
வரப்போகும் ஒரு பேரிழப்பைத் தடுக்க ஒரு தட்டானால் முடியக்கூடுமானால் இயற்கையின் சின்னச் சின்ன சமிக்ஞைகளும் நமக்குக் கற்றுத்தரும் பாடம் எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை உப்புக்காற்று கதை மூலம் உணர்த்தியிருப்பது சிறப்பு. இனி ஒரு விதி செய்வோம் கதையை, இயற்கையின் மாபெரும் மருத்துவப் பெட்டகம் குறித்த நம் அறியாமையைத் தட்டியெழுப்பும் ஒரு கதையாகப் படைத்துள்ளது அருமை. அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி குறித்த நெருடல் ஒரு பக்கம் இருந்தாலும் அதைப் பின்னுக்குத் தள்ளி நம்முடைய பாரம்பரியப் பெருமையைப் பேசும் ஒரு அழகிய ஆவணமாக மிளிர்கிறது இச்சிறுகதை.
அயல்நாட்டு வாழ்க்கையில் எப்போதும் காசு காசு என்று பணம்பிடுங்கும் மனைவியோடு எரிச்சலும் சலிப்புமாய் இல்லறம் நடத்துபவரையும் திருமண பந்தம் ஏதுமில்லாமலேயே பந்துக்களுக்கு உதவி செய்து அதில் ஆத்ம திருப்தி காண்பவனையும் ஒரே கதையில் காட்டி வாழ்க்கையின் இருவேறு கோணங்களைக் காட்டும் கதை காட்சிப்பிழை.
மனைவிமக்களைப் பிரிந்து வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவனுக்கு, மனைவியின் பணத்தேவை மற்றும் விளக்கம்தரப்படாத நடத்தைகளின்பால் இயல்பாய் எழும் மனக்குடைச்சல் மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது ரபீக் @ ஜிமெயில்.காம் கதையில். இறுதியில் கதாசிரியர் குறிப்பிட்டிருப்பது போல பெரிய அசம்பாவிதங்களைத் தடுக்க சில சிறிய விபத்துகள் தேவைதான் என்றாலும் இரண்டிலுமே பாதிக்கப்படுவது சமீமா போன்ற அப்பாவி ஜீவன்களே என்னும்போது வருத்தமெழாமல் இல்லை.
இறுதிவரை மர்மக்கதை போன்ற திகிலுடன் வாசிக்கவைத்த கதை பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா? வியக்கவைக்கும் பல அறிவியல் சங்கதிகளை பல கதைகளிலும் போகிறபோக்கில் அநாயாசமாக அள்ளித்தெளித்துவிட்டுப் போகிறார். வியப்பு மறைய நமக்குதான் நேரமெடுக்கிறது.
அவரு அனில்கும்ளே மாதிரி கதையை வாசிக்கத் துவங்கிய சற்று நேரத்திலேயே எனையறியாது என் இதழோரம் அரும்ப ஆரம்பித்த புன்னகை, அடுத்தடுத்த பத்திகளில் அடக்கமுடியாத சிரிப்பாக விரிய.. புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். நீ ஆசை காட்டி என்னை மோசம் செஞ்சிட்டே இந்த டயலாக்கை தாண்டுவதற்குள்ளேயே போதும் போதும் என்றாகிவிட்டது.
வாழ்வின் பிடிப்பறுந்த நிலையில் முதியோர் இல்லத்தில் வாழும் வயோதிகர்களின் வேதனை தரும் தனிமை ஒரு புறம்கணவன் மனைவி இருவருமே பணிக்குச் செல்லவேண்டிய சூழலில் குழந்தைகளைப் பரிவுடனும் அக்கறையுடனும் பார்த்துக்கொள்ள இயலாத சூழல் இன்னொரு புறம். இரண்டு பிரச்சனைகளுக்கான தீர்வையும் ஒற்றைப்புள்ளியில் பிணைக்கும் அழகானதொரு கதை பனங்கொட்டை சாமியார்.
மனத்துக்கு நெருக்கமாய் வரும் ரசனையான வரிகள் இதம். உதாரணத்துக்கு மனிதரில் இத்தனை நிறங்களா கதையில் கேம்ப்ரிட்ஜ் பற்றிக் குறிப்பிடும் போது ஊரே பாலுமகேந்திரா படம் போல காட்சியளித்தது. பாலுமகேந்திராவையும் அவருடைய ஒளிப்பதிவையும் அறியாதவர்களாயிருப்பின் இந்த ஒற்றைவரிக்குள் பொதிந்திருக்கும் அழகியலைப் புரிந்துகொள்ள இயலாது.
வீடு என்பது சில இடங்களில் வீடு என்றும் சில இடங்களில் மிடு என்றும் குறிப்பிடப்படும்போது புரிதலில் மெல்லிய குறைபாடு. மிடு என்பது வட்டாரவழக்காக இருக்கலாம் என்று நினைக்கிறேன். மற்றபடி வெகு அழகான இயல்பான எழுத்தோட்டம். எழுத்தோட்டத்துடன் கலந்து ஆங்காங்கே இழைந்திருக்கும் நகைச்சுவை சிறப்பு. சில இடங்களில் முறுவல் சில இடங்களில் குபுக்கிடும் சிரிப்பு. கடிநகையோடு சில இடங்களில் நையாண்டியும் வஞ்சப்புகழ்ச்சியும் தலைகாட்டிப்போவதும் சிறப்பு.
நூலை வாசித்து முடிக்கையில், வளைகுடா நாடுகளில் நாமே பயணித்துவந்ததைப் போன்ற உணர்வைத் தருவதோடு, அங்கு வாழும் மாந்தரின் மனவியல்புகளை, சின்னச்சின்ன மகிழ்வுகளை, எதிர்கொள்ளும் சங்கடங்களை, வேதனைகளை, தனிமைத்துயரை, ஏக்கத்தை, ஆதங்கத்தை என அனைத்து உணர்வுகளையும் மிக அற்புதமாய் பதிவுசெய்து நம்மை அச்சூழலில் இருத்தியிருப்பது போல் உணரச்செய்வதே இந்நூலின் வெற்றி.
கண்களை ஈர்க்கும்வண்ணத்தில் அட்டைப்பட ஓவியமும், வாசிக்கத் தோதான 

இடைவெளிவிட்டு, கண்ணை உறுத்தாத எழுத்துவடிவமும் பார்த்தவுடனேயே 

வாசிக்கத்தூண்டும் அழகு. குறுக்கிடும் சில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்துப் 

பார்த்தால் குறையென்று சொல்ல எதுவுமில்லை. நாளை நடைபெறவுள்ள 
நூல்வெளியீட்டு விழாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள் கனவு ப்ரியன்.

கீதா மதி 

Comments

Popular posts from this blog

கூழாங்கற்கள் - நினைவுகள்

கூழாங்கற்கள் - எழுத்தாளர் வாமு கோமு அவர்கள் பார்வையில்