கூழாங்கற்கள் பற்றி நண்பர் காஞ்சீவரம் சதாசிவம்
கையில் கிடைக்கும் புத்தகத்தை, ஆதியிலிருந்தோ, அந்தத்திலிருந்தோ
படிக்கும் வழக்கம் எப்போதுமே இருந்ததில்லை எனக்கு. புத்தகத்தைப் பிரித்ததும்
கண்ணில் படும் பக்கத்தை முதலில் வாசிப்பது எனது இயல்பாக ஆகிவிட்டிருக்கிறது.
'சரியான எக்சென்ட்ரிக் ஆச்சே
அவன்...' என்னை அறியாதவர்கள் என் முதுகுக்குப்பின்னால் நீளமாக கேலியாகச்
சிரிப்பதை என்னால் உணரமுடியும். லெட் இட் பி ஸோ. என்னைப் புரிந்து கொண்டதாக
சொல்பவர்களே அப்படித்தான் எனும்போது மற்றவர்களைப் பற்றி எனக்கென்ன? மனசுக்குள்
சிரித்துக்கொள்வேன் நான்.
"அப்பாக்களை அவர்கள் வேலைசெய்யும் இடத்தில் சந்திப்பதே தனி
அழகு."
"நெற்றித்
தழும்பு" கதையில் என்னைக்கவர்ந்த வரி இது. ஆஹா... என்ன அழகான, அர்த்தமுள்ள, ஆழமான வரி.
படிப்பவர்களுக்கு தத்தமது அப்பாக்களை சட்டென நினைவுக்கு கொண்டுவந்து நிறுத்தும்
வரி. படிப்பதை நிறுத்திவிட்டு கதை சொல்லியின் முன்னுரையைத் தேடினேன்.
"வாசிப்பு
அல்லது நல்ல படைப்பு ஏதேனும் ஒரு தாக்கத்தை தரவேண்டும் என முழுமையாய் நம்புபவன்
நான். என்னுடைய இந்த புத்தகமும் வாசிக்கும் உங்களுக்கு ஏதேனும் ஒரு தாக்கத்தை
தரும் என நிச்சயமாய் நம்புகிறேன்" - என்னுரையில் இப்படிச் சொல்லியிருக்கிறார்
கதாசிரியர்.
சந்தேகமில்லாமல்,
எனக்குள் ஒரு அற்புதமான
தாக்கத்ததை உண்டாக்கிவிட்டார் கனவுபிரியன். என் தகப்பன் காலமாகி பத்து
வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. எனக்கும், என் தந்தைக்கும் இடையில் இருந்த, இதுவரை
யாருடனும் நான் பகிர்ந்துகொள்ளாத,
இன்னும் என்னுள் உயிரோட்டத்துடன்
நிலவிக் கொண்டிருக்கும் சில அற்புதமான, அந்தரங்கமானத் தருணங்களை, மீண்டும்
நினைவுக்கு கொண்டு வந்து, அசைபோட்டு மகிழ வைக்கும் வரி இது.
இவர் எழுதுவதின் நோக்கம் முழுமையுற்றதாகத்தான் எனக்குத்
தோன்றுகிறது.
யாருக்கு எதை பரிசளிக்க வேண்டுமென நன்கு அறிந்த, கூழாங்கற்களை எனக்கு
பரிசாக அளித்த நண்பர் ஷாஜகானுக்கு, எனது நன்றி. மேலும் மேலும் எழுத நண்பர்
கனவுப்பிரியனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
காஞ்சீவரம் சதாசிவம் ரவீந்தரமணி
டெல்லி
Comments