அகல் மின்னிதழ் சத்யா SP கூழாங்கற்கள் பற்றி

கூழாங்கற்கள்
முதலில் இந்த சிறுகதைத் தொகுப்பை எழுதிய கனவுப் பிரியன் அவர்களுக்கும் எனக்கும் துவக்கத்தில் பெரிய பரிச்சயம் என்பதே இல்லை. உண்மையில் சொல்ல வேண்டுமெனில் face book மூலமே அறிமுகம். கனவுப் பிரியனுக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட face book அறிமுக நட்பு பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்
பாராளுமன்ற உணவு விடுதியில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் சகாய விலையில் விற்கப்படுகின்றன அதற்காக நடுவண் அரசாங்கம் பெரிய அளவில் மானியமாக நிதி ஒதுக்கீடு செய்கிறது எனும் செய்தி படித்து கோபத்தால் ஒரு சிறுகதைப் போட்டியினை நம் அகல் மின்னிதழில் அறிவித்திருந்தேன். நண்பர்கள் சிறுகதைகளை அனுப்பிக் கொண்டிருந்தபோது அகல் மின்னஞ்சல் முகவரிக்கு நண்பரின் சிறுகதையொன்று அனுப்பப்பட்டிருந்தது. அயல் தேசப் பின்னணியில் ஒரு சிறுகதை. என்ன இது தலைப்புக்கு சம்பந்தமின்றி இருக்கிறதே என முழுதும் படிக்காது சிறுகதைப் போட்டிகளில் கவனம் செலுத்தத் துவங்கினேன்.
இரு தினங்களுக்குப் பிறகு முழுமையாய் சிறுகதையை வாசித்து முடித்து மனதில் பட்டதை நண்பரிடம் ஸ்லாகித்து அந்த சிறுகதைக்குத் தொடர்புடைய புகைப்படங்கள் அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தேன். நண்பரும் அனுப்பி வைத்தார். அடுத்த இதழில் சிறுகதை வெளியிட அனுமதியும் பெற்று அதன் பின்பே face book மூலம் நட்பு பட்டியலிலும் இணைந்து இன்று கனவுப்பிரியனின் கூழாங்கற்கள் வாசகனாய் சிறுகதைத் தொகுப்பு குறித்து என்னுடைய சிறு அனுபவத்திற்கு எட்டியவரை எழுதுகிறேன்.
இந்த சிறுகதைத் தொகுப்பு எனக்கு கொஞ்சம் விசேஷமே... காரணம் : தொகுப்பில் உள்ள சிறுகதை ஓ ரசிக்கும் சீமானே’ – இந்த சிறுகதையைத் தான் நண்பர் நம் அகல் மின்னிதழுக்கு அனுப்பினார்.
எனக்கு இந்த சிறுகதையின் கரு மிகவும் பிடித்திருந்தது. காரண காரியம் பற்றி சிந்திக்காது எதிர்பார்ப்பின்றி நாம் செய்யும் பரோபகாரத்திற்கு கடவுள் அருள் நிச்சயம் உண்டு என்பதே. இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து கதாசிரியர் அவருக்கே உரிய பாணியில், எளிமையான எழுத்து நடையில், அவருக்கு பரிச்சயமான களத்தில் அனைவர் மனதிலும் பதியும் வண்ணம் எழுதி இருந்தார். இதே கருத்தை மையமாக வைத்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கூழாங் கற்கள் சிறுகதையையும் எழுதியுள்ளார். தொகுப்பில் இவ்விரண்டு சிறுகதைகளும் வசீகரமானவை என்று சொல்லலாம்.
சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 21 சிறுகதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். சில சிறுகதைகளில் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லாமல் போகிறாரே என வாசிக்கும் போதே அவரைக் கூப்பிட்டு கேட்க வேண்டும் என சப்த சூழலை உருவாக்குகிறார். அதே சமயம் பல சிறுகதைகளில் சொல்ல வந்த விஷயத்தை கிரகித்த பின் நம் மனம் பல விதமான யோசனைகளுக்கு ஆளாகி இறுதியில் சுய ஆத்ம விசாரணை என்னும் புள்ளியில் முழுதுமாய் முற்றுபெற முடியாது அலை பாயும் மனதுடன் அமைதிகொள்ள வைக்கிறார்.
இந்த மடம் இல்லைன்னா சந்த மடம்சிறுகதை தான் முதலில் வாசித்து அது கொஞ்சம் மனதை அசைத்துப் பார்க்க, முழுத் தொகுப்பும் இப்படியா? என யோசித்து சரி அடுத்து நண்பர் சீ இராஜேந்திரன் ஸ்லாகித்த அவரு அணில் கும்ளே மாதிரிசிறுகதையைப் படித்த பின்பு மனம் லேசானது. மனம் என்னுடைய விளையாட்டு பருவ நாட்களை புன்முறுவலுடன் அசை போட்டது. அந்த காலகட்டத்தில் என் நண்பருக்கும் எனக்கும் ஒரு கோட் வோர்ட்உண்டு. சிலரைப் பார்த்து கும்ப்ளே டா என்போம். (சிலர் என்றால் சில அழகான பெண்கள் அது எண்ணி மூன்றே பேர் தான்) அதற்கு காரணம் கும்ப்ளேவை எங்கள் இருவருக்கும் மனதில் இடம் கொடுத்திருந்தோம். நாங்கள் இருவரும் அவரது பந்து வீச்சின் ரசிகர்கள்.
எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு அழகான பெண் அவர் எப்போதும் பாவாடை தாவணி மற்றும் பண்டிகை தினங்களில் புடவை அணிந்தே வளைய வருவார். தலை வாரி ரப்பர் பாண்ட் இட்டு, மெலிதாய் ஒரு குங்குமக் கீற்று, காதில் ஜிமிக்கி அணிந்திருப்பார். அந்தப் பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் ஒரு பரவச அமைதி எனக்கு. அந்தப் பெண் கடக்கும் போது நண்பன் என்னைப் பார்த்து தவறாமல் சொல்வது மாப்ள உன் கும்ப்ளே டா’. இந்த சிறுகதை இந்த சம்பவத்தை சுகமாய் அசை போட வைத்தது.
அதே போல் நம்பிக்கை விதை தூவும் விதத்தில் இனியொரு விதி செய்வோம்போல் அழகான சிறுகதைகளும் இருப்பது பாஸிடிவான விஷயம்.
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாதலைப்பு வேடிக்கையாக இருக்கே எனப் படிக்க ஆரம்பித்து இப்படியுமாஎன யோசிக்க வைத்தது.
அதே போல் சாதாரணமாய் எல்லோரும் சொல்லும் வார்த்தை தானே என பெரிதாய் கவனிக்காது நம் அன்றாட வாழ்வில் கடக்கும் சொல்லாடலின் உண்மையான வீர்யத்தை உணரவைத்தது உடம்பெல்லாம் திடீர்னு வேர்த்திருக்குதே. என்ன செய்யுது உங்களுக்கு?” – ‘அக்கா நீங்க அழகா இருக்கீங்க என்னும் சிறுகதை
மனதை விட்டு அகலாது என்றென்றும் யோசித்தபடி தவிக்கவிடும் சிறுகதை ஜுவானா என்றொரு பிலிப்பைனி பெண்இந்தத் தொகுப்பின் மாஸ்டர் பீஸ் என்றால் அது மிகையில்லை.
சிறுகதைத் தொகுப்பு தொடர்பான கருத்துகள் அனைத்தும் என் சிற்றறிவுக்கு எட்டிய வரையிலும் எனக்கு கிடைத்த சிறு வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாக வைத்தும் எழுதியது.
இறுதியாக கனவுப் பிரியனுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் அது என்னைப் போன்ற சாதாரண மனிதனுக்கு நிதானம் பழக உதவும்
நண்பர்கள் அனைவரும் வாசியுங்கள்.

புத்தகப் பெயர் : கூழாங்கற்கள் 
எழுதியவர் : கனவுப் பிரியன் 
பதிப்பகம் : ஓவியா பதிப்பகம் 
புத்தகம் வாங்க 7667557114, 9629652652 என்னும் அலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

கூழாங்கற்கள் - நினைவுகள்

சுமையா சிறுகதைத்தொகுப்பு பற்றிய Sakthi RS அவர்களின் வாசிப்பனுபவம்