கூழாங்கற்கள் புத்தகம் பற்றி மாதவன் ஸ்ரீரங்கத்தின் வாசிப்பு அனுபவம்

கூழாங்கற்கள்...
__________________
வெகுநாட்களாக அலமாரியில் இருந்தபடி என்னை கைநீட்டி அழைத்துக்கொண்டிருந்த கனவுப் பிரியன்இன் #கூழாங்கற்கள் புத்தகத்தினை இன்றுதான் வாசிக்கமுடிந்தது. 

 
புத்தகத்தின் முன்னுரையில் கி.ரா எழுதியிருப்பதுபோல, முதல் மற்றும் இறுதிக்கதைகளை மட்டும் வாசித்துவிட்டு 'தொடர்ந்து இவர் எழுதலாம்' என்பதுபோல தட்டையாக புத்தகம்பற்றி ஏதேனும் எழுதிவைப்பதற்கு சும்மாவே இருக்கலாம் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால் அப்பொழுது தான் வெளிவரும் ஒரு புத்தகத்திற்கு வேறெப்படி முன்னுரை எழுத இயலுமென்றும் கேள்வியெழுகிறது.

நிற்க, ஃபேஸ்புக்கை பொறுத்தவரை கனவுப்ப்ரியனின் சரளமான எழுத்தாற்றல் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். கட்டியங்களே அவசியமில்லை. ஆயின் ஒரு தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்த புத்தகம் கொஞ்சம் திருப்தியையும் கொஞ்சம் ஆதங்கத்தினையும் உருவாக்கிவிட்டது.

ஏனெனில் கதைக்களம் மற்றும் கதைசொல்லும் உத்தி, சுவாரஸ்யமான நடை எவற்றிலும் மேலதிகப் புதிய முயற்சிகள் எதையும் செய்துவிடவில்லை எனும் ஏமாற்றம் ஒருபுறம் இருக்க, ஏதோ மிகுந்த அவசரம் காரணமாக வெளியிட்ட ஒரு தொகுப்பாகவே இது எனக்குத் தோன்றியது. தன்னளவில் மிகக்கூர்மையான பார்வையும் நுட்பமான, ரசனைமிக்க எழுத்தும் கைவரப்பெற்ற அவர் இன்னமும்கூட கனமான கதைகளைத் தெரிவுசெய்திருக்கலாம். 

ஒட்டுமொத்த பார்வையில், பணிநிமித்தம் அயல்நாடுகளில் அலைந்துதிரியும் ஒருவனின் நாட்குறிப்புகளை வாசிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

உண்மையைக்கூறினால், எனக்கு சிறுகதை என்பதற்கான இலக்கணங்கள் அவ்வளவாகப் பிடிபடவில்லை என்பதுவே நிதர்சனம். எனது காலத்திற்குள் ஒரேயொரு உன்னதமான சிறுகதையேனும் எழுதிவிடும் நம்பிக்கையுடன் தொடர்ந்துகொண்டிருக்கிறது எனது முயற்சி. 

இருந்தும் இத்தொகுப்பிலுள்ள சில கதைகளைச் சிறுகதைகள் என ஏற்கவே மனம் ஒப்பவில்லை. செறிவற்ற ஒரு கட்டுரை போலவும், பத்தி போலவுமே அவை காணப்படுகின்றன. 

ஒரு தொகுப்பில் குறைந்தது மூன்று கதைகள் நன்றாயிருந்தால்கூடப் போதுமானதென யாரோ ஒருமுறை கூறியது நினைவில் வந்துபோனது. அவ்வகையில், கணக்கற்ற அச்சுப்பிழைகளின் இடையூறு கடந்தும், இத்தொகுப்பிலுள்ள பல கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.

'
கூழாங்கற்கள்' கதையும், 'மேட் இன் சைனா' வும், 'நெற்றித்தழும்பு'ம் பளிச்சென்று மனதில் ஒட்டிக்கொள்கின்றது. 'பெட்ரொமாக்ஸ்' கதையும், 'காட்சிப்பிழையும்' மெலிதான மர்மத்தை நமக்குள் தடவிச்செல்கின்றன. 'உப்புக்காற்றை' கடந்துசெல்கையில் நமது மேலெங்கும் பிசுபிசுப்பாய் எழுகிறது கடல்வாடை.

'
வடிவு' கதையில் வரும் கிழவி, இன்றைக்கும்கூட கிராமங்களுக்குச்சென்றால் நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய வெகு இயல்பான பாத்திரம். இன்னமும் சற்று முயன்றிருந்தால் மிக அட்டகாசமான கதையாக அது வந்திருக்குமே எனும் அங்கலாய்ப்பை தவிர்க்க இயலவில்லை. அதேபோல, 'களிமண்' கதை, 'கடல் தாண்டிய உறவு' கதை, அந்தமடம் சந்தமடம் கதையும்கூட முழுமையற்ற அரைகுறை உணர்வையே கொடுத்தன.

மற்றபடி, இலக்கியமுலாம் எதுவும் பூசப்படாத வெகு எளிமையான இப்புத்தகம், நாம் நேரில் சென்றிருக்காத தேசங்களை, அங்குள்ள சில மனிதர்களை என்று அழகாக எழுத்தில் படம் பிடித்துக்காட்டுகிறது. இனி சற்றே தடிமனாக எவரையேனும் பார்க்கநேர்ந்தால் எனக்கு நிச்சயம் 'குண்டு பாகிஸ்தானி' நினைவுக்கு வருவார்.

புறக்கணிப்புகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி, மிகுந்த வீரியத்துடன் அவர் தனது அட்டகாசமான அடுத்த படைப்பினைக் கொண்டுவருவார் எனும் நம்பிக்கை நிறையவே எனக்கிருக்கிறது.

அன்பும் வாழ்த்துகளும் ப்ரோ

மாதவன் ஸ்ரீரங்கம் 

Comments

Popular posts from this blog

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

சுமையா - சிறுகதைத்தொகுப்பு பற்றி சுப்ரா வே சுப்பிரமணியன்

கூழாங்கற்கள் - எழுத்தாளர் உதய சங்கர் அவர்களின் விமர்சனம்